சோட்டா ராஜன் எக்ஸ்
இந்தியா

மும்பை ஹோட்டல் அதிபர் கொலை வழக்கு | சோட்டா ராஜனுக்கு ஆயுள்தண்டனை.. 23 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு!

ஹோட்டல் அதிபர் ஜெயா ஷெட்டியை கொலை செய்த வழக்கில் மாஃபியா கும்பல் தலைவர் சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Prakash J

கடந்த 2001ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி, தெற்கு மும்பை, கிராண்ட் ரோடு பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோல்டன் கிரவுன் ஹோட்டலின் அதிபரான ஜெயா ஷெட்டியை அதே ஹோட்டலில் வைத்து சோட்டா ராஜனின் ஆட்கள் இருவர் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹோட்டல் மேலாளர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

விசாரணையில், சோட்டா ராஜன் குழுவைச் சேர்ந்த ஹேமந்த் புஜாரி என்பவர் ஜெயா ஷெட்டியிடம் பணம் கேட்டுத் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும், பணம் தர மறுத்ததால் கொலை செய்ததாகவும் தெரிய வந்தது. முன்னதாக, சோட்டா ராஜனின் கூட்டாளிகளிடமிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டதால், ஜெயா ஷெட்டி போலீசில் புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பின்னர், அவர் பாதுகாப்பைத் திரும்பப் பெறுமாறு கோரியிருந்தார். பாதுகாப்பு அகற்றப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார்.

இதையும் படிக்க: India Head Coach | தகுதிகள் என்னென்ன? தோனிக்கு ஏன் வாய்ப்பில்லை? கம்பீருக்கு இதனால்தான் வாய்ப்பு!

இந்த வழக்கில் சோட்டா ராஜன் மீதும், அவருடைய கூட்டாளிகள் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இன்று சிறப்பு நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிபதி ஏ.எம்.பாட்டீல், சோட்டா ராஜனை குற்றவாளி என்று தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். இந்த வழக்கில் 23 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே பத்திரிகையாளர் ஜே டே-வை 2011-இல் கொன்ற வழக்கில் சோட்ட ராஜனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக 1989ஆம் ஆண்டு துபாய்க்குச் சென்று 27 ஆண்டுகள் பதுங்கியிருந்த நிலையில், 2015, நவம்பரில் இந்தோனேசியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். அதாவது, ஏற்கெனவே ஆயுள் தண்டனை பெற்று சிறையிலுள்ள நிலையில், மீண்டும் ஆயுள் தண்டனை பெற்றிருக்கிறார் அவர்.

இதையும் படிக்க: “அக். 7 உங்கள் கண்கள் எங்கே இருந்தன?” - வைரலாகும் All Eyes On Rafah ஹேஷ்டேக்-க்கு இஸ்ரேல் பதில்!