இந்தியா

'வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த முடியாதா?' - மத்திய அரசை விமர்சித்த மும்பை ஐகோர்ட்

'வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த முடியாதா?' - மத்திய அரசை விமர்சித்த மும்பை ஐகோர்ட்

நிவேதா ஜெகராஜா

வீடுகளுக்கேச் சென்று தடுப்பூசி வழங்கும் விவகாரத்தில் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக மத்திய அரசை மும்பை உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

சில தினங்களுக்கு முன், '75 வயதைக் கடந்தவர்கள், நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் மற்றும் படுக்கையில் இருப்பவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கேச் சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்' எனக் கோரி துருதி கபாடியா, குனால் திவாரி என்ற இரண்டு வழக்கறிஞர்கள், மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

தற்போதைய சூழ்நிலையில், மும்பையில் கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்துவிட்டாலும், அங்கு கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி போடவில்லை. தடுப்பூசி போட பதிவு செய்துள்ளவர்கள் அதற்காக பல நாள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. 18 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமல்ல; வயதானவர்களுக்கும் இதே நிலைதான் என்பதால் இந்த இரண்டு வழக்கறிஞர்களும் பொதுநல மனுவை தாக்கல் செய்தனர்.

மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திபன்கர் தத்தா முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, "பொதுமக்களின் வீடுகளுக்கேச் சென்று தடுப்பூசி போடும் வகையில் மத்திய அரசு தங்கள் கொள்கையை மாற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா?" என்று அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

பின்னர் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அனில் சிங், ''பொதுமக்களின் வீட்டுக்கே சென்று தடுப்பூசி போடப்படுவது குறித்து ஆய்வு செய்ய அரசு சார்பில் நிபுணர்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு ஆலோசனை நடத்தியதில் நோயாளிகளைத் தடுப்பூசி போட ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்வது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. எனவே, இந்தத் திட்டத்துக்கான வழிமுறைகளை மத்திய அரசு விரைவில் வெளியிடும்" என்று தெரிவித்திருந்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி திபன்கர், ''நிபுணர் குழுவில் இடம்பெற்று இருப்பவர்களுக்கு கள நிலவரம் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நம் நாட்டில் அதிகமான கட்டடங்கள் பெரும்பாலும் குறுகலான தெருக்களில் அமைந்திருக்கும். அங்கிருந்து நோயாளிகளை ஸ்ட்ரெச்சரில் கொண்டு வர வேண்டும் என்பது முடியாத காரியம். நான் பிறந்து வளர்ந்த கொல்கத்தாவில் பல்வேறு குடியிருப்புகள் நெருக்கமான இடங்களிலேயே உள்ளன. அந்தப் பகுதிகளில் ஸ்ட்ரெச்சர் கொண்டு செல்ல முடியாது. முதியோர்கள் அதிகமானோர் இதுபோன்ற குறுகலான தெருக்களில், கட்டிடங்களில் வசிக்கிறார்கள்" என்று பேசியதுடன், ''நிலைமை இப்படி இருக்க வயதானவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் தடுப்பூசி பெற உரிமை இல்லை என்று மத்திய அரசு சொல்கிறதா? உங்கள் பதில் மூலம் மத்திய அரசு வீட்டில் சென்று தடுப்பூசி போட தயாராக இல்லை என்பது தெரிகிறது.

மும்பை மாநகராட்சி, முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் வீட்டுக்கேச் சென்று தடுப்பூசி போடத் தயாராக இருக்கும் பட்சத்தில் மத்திய அரசின் அனுமதி வேண்டி காத்திருக்க வேண்டாம். நாங்களே அனுமதி தருகிறோம். மும்பை மாநகராட்சி இதை செய்ய முடியுமா என்பது குறித்து மாநகராட்சி கமிஷனர் இக்பால் பதிலளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.