இந்தியா

ஹெச்டிஎஃப்சி துணைத்தலைவர் கொலை?.. வளர்ச்சி பிடிக்காதது காரணமா..?

ஹெச்டிஎஃப்சி துணைத்தலைவர் கொலை?.. வளர்ச்சி பிடிக்காதது காரணமா..?

Rasus

ஹெச்டிஎஃப்சி வங்கியின் துணை தலைவர் சித்தார்த் கிரண் சங்வியின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மும்பையில் கடந்த வாரம் காணாமல் போன ஹெச்டிஎஃப்சி வங்கியின் துணை தலைவர் சித்தார்த் கிரண் சங்வியின் உடல் மும்பை அருகே மீட்கப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை அலுவலகத்தில் இருந்து கிளம்பிய 39 வயதான ஹெச்டிஎஃப்சி வங்கியின் துணை தலைவர் சித்தார்த் சங்வி, வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரை தேடி வந்தனர்.

அடுத்த நாளே நவி மும்பை அருகே சித்தார்த்தின் கார் கண்டுபிடிக்கப்பட்டது, அதில் ரத்தகறையும் கத்தியும் இருந்தது. இந்த நிலையில் இன்று காலை தானேவின் கல்யாண் பகுதியில் சித்தார்த்தின் உடலை காவல்துறையினர் மீட்டுள்ளனர். சித்தார்த் கொலை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகப்படும் காவல்துறையினர் 20 வயதான சர்ஃபாரஸ் என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சித்தார்த்தின் வளர்ச்சியை பிடிக்காமல் உடன் பணியாற்றுபவர்களே இந்த கொலையை செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.