தேரா பெயின்ட்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் என்று முன்பு அழைக்கப்பட்ட பெயின்ட் நிறுவனம், தற்போது மிட்ஷி இந்தியா லிமிட் என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், காகிதம், பிளாஸ்டிக், உலோகப் பொருட்கள் மற்றும் மொத்த பழங்கள், காய்கறிகளையும் உற்பத்தி செய்து வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ₹20.22 கோடியாக உள்ளது.
இந்த நிறுவனத்தில் ரிங்கு பட்டேல் என்பவர் தலைமை நிதி அதிகாரியாகப் (CFO) பணிபுரிந்து வந்தார். அவர் தன்னுடைய பணியைச் சொந்த காரணங்களுக்காக சமீபத்தில் ராஜினாமா செய்துள்ளார். அவருடைய ராஜினாமா கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த ராஜினாமா கடிதம் கடந்த மாதம் 15ஆம் தேதி எழுதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அந்த ராஜினாமா கடிதம் தற்போது வைரலாக காரணம், அதை அவர் தனது மகனின் நோட்புக்கிலுள்ள பேப்பரை பயன்படுத்தி எளிமையான முறையில் எழுதி, போட்டோ எடுத்து அனுப்பி வைத்ததுதான். அந்த கடிதத்தை சம்பந்தப்பட்ட நிறுவனமும் உடனே ஏற்றுக்கொண்டுள்ளது.
மிட்ஷி இந்தியா லிமிட் நிறுவன இயக்குநருக்கு அவர் எழுதியுள்ள அந்த ராஜினாமா கடிதத்தில், “எனது தனிப்பட்ட காரணங்களுக்காக நான் CFO பணியிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்கிறேன் என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்ததில் மிகுந்த மகிழ்ச்சியும் சிறந்த அனுபவமும் இருந்தது” என தெரிவித்துள்ளார்.
பொதுவாக, இன்றைய காலக்கட்டத்தில் நிறுவனங்களில் பணிபுரியும் பலரும், இமெயில் மூலம் தங்களது ராஜினாமா கடிதங்களை டைப் செய்து அனுப்புவர். இன்னும் சில நிறுவனங்களில் வெறும் பேப்பரில் டைப் செய்து, அதில் கையெழுத்திட்டு அனுப்புவர். ஆனால், ரிங்கு படேல் இன்றைய காலத்திலும் இப்படி எளிமையான முறையில் அனுப்பியிருப்பதுதான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.