இந்தியா

காதணியை முழுங்கிய குழந்தை!

webteam

மும்பை குர்லா பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் சோனி. இவரது குழந்தை குஷி. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குஷி, திடீரென்று மூச்சுவிட சிரமப்பட்டதைப் பெற்றோர் பார்த்தனர். காய்ச்சல் இருப்பது போலவும் தெரிந்தது. உடனடியாக மருத்துவரிடம் கொண்டு சென்றனர். அவர் சாதாரண காய்ச்சல் என நினைத்து மாத்திரைகள் கொடுத்தார். அதைத் தின்றும் உடல் நிலை சரியாகாததால், சயானில் உள்ள லோக்மான்யா திலக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். அதில் எதுவும் தெரியவில்லை. குழந்தை தொடர்ந்து மூச்சு விட சிரம்பட்டது. உடல் நிலையும் மோசமானது. வியாழக்கிழமை அன்று குழந்தைக்கு முதல் பர்த்டே. அதைக் கொண்டாட முடியாமல் போய் விடுமோ என்று பயந்தார் சந்தீப். 

இதையடுத்து சிலரது யோசனைப்படி, பரேலில் உள்ள தனியார் மருத்துவமனையான பிஜே வாடியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உடனடியாக எக்ஸ்ரே எடுத்து சோதிக்கப்பட்டது. அப்போது மூச்சுக்குழாயில் இரண்டு இன்ச் அளவுள்ள தோடு ஒன்று சிக்கியிருந்தது தெரிய வந்தது. ஆபரேஷன் இல்லாமல் அதை எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். பின்னர் சிறப்பாக செயல்பட்டு அதை வெளியே எடுத்தனர். 

’குழந்தை இப்போது நலமாக இருக்கிறாள். இது சவாலான சிகிச்சைதான். அதை சரியாக செய்து முடித்து, அவளது முதல் பிறந்த நாளை இங்கு கொண்டாடினோம்’ என்றனர் டாக்டர்கள்.