model image pt web
இந்தியா

முகேஷ் அம்பானி நிறுவன பெயரில் போலி AI வீடியோ.. முதலீடு செய்து ரூ.7 லட்சத்தை இழந்த மும்பை மருத்துவர்!

Prakash J

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது செயற்கை நுண்ணறிவு (AI). இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இது, பலவிதமான தொழில் நுட்பங்களையும் அணுகுமுறைகளையும் பயன்படுத்துகிறது. மேலும், சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில் நாளுக்குநாள் மேம்பட்ட தொழில்நுட்பத்தை இதன்மூலம் பொறியாளர்களும் தயாரித்து வருகின்றனர்.

AI

இது, சுகாதாரம், நிதி, போக்குவரத்து, உற்பத்தி, வாடிக்கையாளர் சேவை மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதேநேரத்தில், ஏஐ தொழில்நுட்பத்தின் வாயிலாக, சைபர் தாக்குதல்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், மும்பையைச் சேர்ந்த ஆயுர்வேத பெண் மருத்துவர் ஒருவர் ரூ.7 லட்சத்தை இழந்துள்ளார்.

இதையும் படிக்க: ஆந்திரா| அன்று வீடு..இன்று அலுவலகம்; ஜெகன் கட்டடம் இடிப்பு..பழிக்குப்பழி வாங்கும் சந்திரபாபு நாயுடு!

அந்தேரியைச் சேர்ந்தவர் கே.கே.எச்.பாட்டீல் (54). ஆயுர்வேத பெண் மருத்துவரான இவர், கடந்த மே 28 முதல் ஜூன் 10 வரை, 16 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ.7.1 லட்சத்த்தைப் பரிமாற்றம் செய்துள்ளார். உயர் லாபம் மற்றும் அம்பானியின் போலி வீடியோ ஆகியவற்றால் தொடர்ந்து அந்தப் பெண் முதலீடு செய்துள்ளார். ஆனால், பின்னர் வர்த்தக இணையதளத்தில் காட்டப்பட்ட ரூ.30 லட்சம் லாபத்தைத் திரும்பப் பெற முயன்றபோதுதான் அது மோசடி எனத் தெரியவந்தது. அதாவது, தொழிலதிபர் முகேஷ் அம்பானி ராஜிவ் சர்மா டிரேட் குரூப் என்ற நிறுவனத்தை ஆதரித்துப் பேசுவது போன்ற (deepfake) வீடியோ ஒன்றை மோசடிக் கும்பல் உருவாக்கியுள்ளது.

Mukesh ambani

இந்த போலி வீடியோவைக் கண்டு நம்பிய பாட்டீலும், அதில் பணத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால், தற்போது அது மோசடி எனத் தெரிய வந்ததை அடுத்து, ஏமாற்றிய அந்த அடையாளம் தெரியாத நபரின் மீது ஆள் மாறாட்டம், ஏமாற்றுதல் மற்றும் அடையாளத் திருட்டு ஆகிய குற்றங்களுக்காக ஐபிசி மற்றும் ஐடி சட்ட பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அந்த போலியான வீடியோவை உருவாக்குவதற்காக டீப்ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த மருத்துவர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் இந்தப் போலியான வீடியோவை பார்த்துள்ளார். அதனை நம்பி பணத்தை முதலீடு செய்ததாகக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: ஹிஜாப் அணிய தடை.. மீறினால் அபராதம்.. தஜிகிஸ்தான் அரசு அதிரடி!