இந்தியா

”திறமைக்கு இன்னும் அங்கிகாரம் கிடைக்கவில்லை”: இளம் கிரிக்கெட் வீரர் எடுத்த விபரீத முடிவு

jagadeesh

மகாராஷ்ட்டிரா மாநிலம் மும்பையின் மலாட் பகுதியை சேர்ந்தவர் கரண் திவாரி (27). இவர் ஒரு கிரிக்கெட் வீரர். கரண் திவாரி மும்பை ரஞ்சி அணியின் வீரர்களுக்கு வலைப் பயிற்சியின்போது பந்துவீச்சாளராக இருந்து வருகிறார்.

மும்பை சீனியர் கிரிக்கெட் அணியில் இடம் கிடைப்பதற்காக கரண் திவாரி வெகுநாளாக முயன்று வந்துள்ளார். ஆனால் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அவர் அணியில் இல்லை என்றாலும் மும்பை வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபடும்போது அவர்களுக்கு பந்துவீசும் நபராக கரண் திவாரி இருந்து வந்துள்ளார். ஆனாலும் கரண் திவாரி தொடர்ந்து வருத்தத்திலும் மன அழுத்தத்திலும் இருந்து வந்துள்ளார். தன்னுடைய திறமைக்கு இன்னும் அங்கிகாரம் கிடைக்கவில்லை என்று ராஜஸ்தானில் இருக்கும் தன்னுடைய சகோதரிக்கு தொலைப்பேசி மூலம் திங்கள்கிழமை பேசியுள்ளார் கரண்.

தன் சகோதரியிடம் பேசிவிட்டு, பின்பு அன்று இரவு 10.30 மணிக்கு தன்னுடைய அறை கதவை சாத்தியுள்ளார் கரண். பின்பு காலையில் பார்த்தபோது அவர் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கரண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நண்பர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கரண் கடந்த சில மாதங்களாக எதிர்காலம் குறித்த அச்சத்துடனும், கிரிக்கெட்டில் முறையான அங்கிகாரம் கிடைக்காத வருத்தத்துடன் பேசி வந்ததாக கூறியுள்ளனர். மேலும் கொரோனா பொது முடக்கமும் கரணை சோர்வடைய வைத்துள்ளதாக தெரிகிறது.

கரண் திவாரியின் மறைவுக்கு மும்பை அணியைச் சேர்ந்த சில கிரிக்கெட் வீரர்களும், சில நடிகர்களும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை சமூக வலைத்தளம் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.