இந்தியா

மும்பையில் கொட்டித்தீர்த்த மழை: மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை

மும்பையில் கொட்டித்தீர்த்த மழை: மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை

Veeramani

நேற்று ஒரே இரவில் பெய்த தொடர்மழை காரணமாக பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதால், மும்பையில் உள்ள அனைத்து அலுவலகங்களும், தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் மட்டுமே திறந்துள்ளன.

கடந்த 22 மணிநேரத்தில், அதாவது திங்கட்கிழமை காலை 8 மணி முதல் செவ்வாய்கிழமை காலை  6 மணிவரை தெற்கு மும்பையில் 230 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த நேரத்தில் மேற்கு மற்றும் கிழக்கு மும்பை பகுதிகளில் 162 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மும்பையில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பல்வேறு முக்கிய சாலைகள் மற்றும் இடங்களில் பெருமளவில் தண்ணீர் தேங்கிக்கிடக்கிறது.

அதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், கடைகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்களை திறக்கவேண்டாம் என்றும் மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. முன்னதாக மும்பை மாநகராட்சி நேற்று வானியல் மையத்தின் எச்சரிக்கையின்படி அதிக அளவிலான மழை பொழிய வாய்ப்புள்ளது. அதனால் மக்கள் வெளியில் வருவதை தவிர்க்கவும் என்று எச்சரித்திருந்தது.

இன்று அதிகாலை 4 முதல் 6 மணிவரை மேற்கு மற்றும் கிழக்கு மும்பையில் 60 முதல் 80 மில்லிமீட்டர் மழையும், தெற்கு மும்பையில் 30 முதல் 45 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.