இந்தியா

மகாராஷ்டிராவை உலுக்கும் மாபெரும் விவசாயிகள் பேரணி

rajakannan

விவசாயிகளின் கடன்களை முற்றிலுமாக ரத்து செய்யக்கோரி மகாராஷ்ட்ர மாநிலம் நாசிக்கிலிருந்து தொடங்கி மும்பை நோக்கிச் செல்லும் பேரணி தானே நகருக்குச் சென்றடைந்துள்ளது. 

அகில இந்திய கிஷான் சபா சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6-ஆம் தேதி நாசிக்கில் இருந்து மும்பையில் உள்ள மராட்டிய சட்டசபை நோக்கி விவசாயிகள் பிரமாண்ட பேரணியை தொடங்கினர். இதில் 25 ஆயிரம் விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினரும் ஆதரவு தெரிவித்து பேரணியில் பங்கு கொண்டு உள்ளனர். ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக மாநில அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின விவசாயிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். இது தங்களுக்கு வாழ்வா? சாவா? பிரச்னை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், நாளை (திங்கட்கிழமை) பேரணியாக வரும் விவசாயிகள் சட்டசபையை (விதான் பவன்) முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் விவசாயிகளின் பேரணி நேற்று தானே மாவட்டத்தை வந்தடைந்தது. தற்போது மும்பை தானே நெடுஞ்சாலையில் விவசாயிகள் பேரணி சென்று கொண்டிருக்கிறது.

முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருள்களுக்கு தகுந்த விலை, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், வன உரிமை சட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செல்லும் வழி நெடுகிலும் இவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் இணைந்த வண்ணம் உள்ளனர். இந்தப் பேரணி நாளை மும்பை நகருக்குச் சென்றடைகிறது.

அகில இந்திய கிஷான் சபா அமைப்பின் மாநில செயலாளர் அஜித் நவாலே கூறுகையில், இலக்கை(சட்டசபை) எட்டுவதற்குள் பேரணியில் கலந்து கொண்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 55,000-ல் இருந்து 60 ஆயிரம் ஆக உயரும் என்றார். 
விவசாயிகளின் இந்தப் பேரணிக்கு சிவசேனா கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.