மும்பையை அடுத்த தானே பகுதியில், பத்லாபூரின் கோரேகான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முதாசிர் புபெரேவ். இவர் அப்பகுதியில் தையல் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவரின் மகன் இபாதத் புபெரே (வயது 9).
கடந்த ஞாயிறுக்கிழமை இரவு 9 மணியளவில் முதாசிர் தொழுகைக்காக அருகில் இருந்த மசூதிக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த சிறுவன் இபாதத், ஐஸ்கிரீம் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் ஐஸ்கிரீம் வாங்க சென்ற இபாதத் வீடு திரும்பவில்லை. தொழுகை முடித்து வீடு திரும்பிய முதாசிர், மகன் இபாதத்தை தேடத்துவங்கியுள்ளார். ஆனால் இபாதத் எங்கிருக்கிறார் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில் அன்று இரவு 9.40 க்கு முதாசிர் தொலைபேசிக்கு ஒரு மர்ம அழைப்பு வந்துள்ளது, அதில் பேசிய மர்ம நபர், “உங்கள் மகன் உயிரோடு வேண்டுமென்றால், எனக்கு 20 லட்சம் பணம் கொடுங்கள்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ந்த முதாசிர், உடனடியாக குல்கான் காவல் நிலையத்தை தொடர்புக்கொண்டு நிலைமையை விளக்கியுள்ளார்.
உடனடியாக போலீசாரும் சிறுவனை கண்டுபிடிக்க குழுக்கள் அமைத்து தேடிவந்தனர். விசாரணையில் தந்தை முதாசிரின் தொலைபேசிக்கு வந்த மர்ம கால் ட்ரேஸ் செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் தொலைபேசிக்கு வந்த அழைப்பானது அக்கிராமத்திலிருந்து சிறிது தூரம்தான் என்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் போலிசார் தனது சோதனையை மேற்கொண்டனர். அப்பொழுது ஒரு ரீசார்ஜ் கடையில் சஃப்வான் மௌலவி என்ற ஒரு நபர், ஒரு எண்ணுக்கு ரீசார்ஜ் செய்து அதிலிருந்து பேசியது தெரிந்துள்ளது.
இந்த சஃப்வான் மௌலவி வேறுயாரும் இல்லை... முதாசிர் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்தான்! இது தெரிந்ததும், போலிசார் சஃப்வான் மௌலவியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரனையில் சஃப்வான் மௌலவி உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் தன் வாக்குமூலத்தில், “நான் எனது நிலத்தில் ஒரு வீடு கட்டி வந்தேன். அதற்கு மேலும் 20 லட்சம் பணம் தேவைப்பட்டதால், பணத்திற்காக அலைந்தேன். அப்போது பக்கத்து வீட்டுக்காரரான முதாசிர் நடத்திவந்த தையல் கடையில் நல்ல வருமானம் இருப்பதை அறிந்தேன். முதாசிர் நல்ல வசதிபடைத்தவர் என்பதை அவருடைய தையல் கடையில் பணிபுரியும் எனது அண்ணன் மகன் மூலம் தெரிந்துக்கொண்டேன்.
இதனால் இபாதத்தை கடத்தி முதாசிடமிருந்து 20 லட்ச ரூபாயை பறிக்கத் திட்டம் போட்டேன். ஆனால் முதாசிர் காவல்துறையிடம் சென்றதும் பயத்தில் இபாதத்தை கொலை செய்து, நான் கட்டிவந்த கட்டடத்தின் பின்புறம் புதைதுவிட்டேன்” என தெரிவித்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
இதன்பேரில் மௌலவி சுட்டிக்காட்டிய இடத்தை தோண்டி இபாதத்தின் உடலை மீட்ட போலிசார், பிரேத பரிசோதனைக்காக உடலை அங்கிருக்கும் ஜேஜே மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
சிறுவன் கொலை காரணமாக அப்பகுதியில் போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால், அக்கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.