மும்பை தாராவியில் கோவிட் -19 இன் பரவலைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில், சிறந்த பணி மற்றும் சிறந்த நிர்வாகத்திற்காக பாராட்டப்பட்ட சக்கினகா பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் ரமேஷ் நங்கரே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
சமீபத்தில் கோவிட் -19 க்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியை எடுத்துக்கொண்டார் ரமேஷ் நங்கரே. ஆனால் தடுப்பூசிக்கும், அவரது இறப்புக்குமான எந்தவொரு தொடர்பும் இல்லை என சுகாதாரத் துறை நிராகரித்துள்ளது என்று மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 1989 பேட்ஜ் போலீஸ் அதிகாரியான நங்கரே, சமீபத்தில் சக்கினகா பிரிவில் பணியமர்த்தப்பட்டார். கடந்த புதன்கிழமை இரவில், உடல்நிலையில் சில அசெளகரியத்தை அவர் உணர்ந்தார், பின்னர், அதிகாலை 5 மணிக்கு வீட்டிற்கு திரும்பிய அவருக்கு காலை 10 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நங்கரேவுக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
தாராவியில் கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான, நங்கரேவின் அசாதாரண பணிக்காக அவரது சகாக்களும் மூத்தவர்களும் பாராட்டுகிறார்கள். கொரோனா தீவிரமாக பரவிய போது தாராவி குடியிருப்பாளர்களுக்கு பொதுமுடக்க விதிகளை கடுமையாக அமல்படுத்துதல், முகமூடிகள், சானிடிசர்கள் மற்றும் உணவு தானியங்களை விநியோகிப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
மேலும் வீடு, வீடாக நடந்துசென்று கோவிட்-19 பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட இப்பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக அவர் செய்த சிறந்த பணிக்காக நாட்ஜியோவின் ஆவணப்படத்தில் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.