இந்தியா

'புதிய அணை கட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது' - கேரள ஆளுநரின் உரைக்கு தமிழக அரசு கண்டனம்

'புதிய அணை கட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது' - கேரள ஆளுநரின் உரைக்கு தமிழக அரசு கண்டனம்

சங்கீதா

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், புதிய அணை கட்டப்படும் என கேரள ஆளுநர் உரையில் தெரிவித்ததற்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கேரள சட்டப் பேரவையின் நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதையொட்டி சட்டப்பேரவையில் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் உரையாற்றினார். அப்போது, “கேரள மக்களின் பாதுகாப்பு தான் மிகவும் முக்கியம் என்பது மாநில அரசின் பெரும் கவலையாகும். இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையில் இருந்து, அண்டை மாநிலமான தமிழகத்திற்கு தேவையான நீரை பகிர்ந்து கொள்கிறோம். அதேநேரத்தில், கேரள மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்காக நீரை பகிர்ந்து கொள்வதில் உறுதியாக உள்ளது. அதேநேரத்தில் 125 ஆண்டுகள் பழமையான தற்போதைய முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு விரும்புகிறது” என தெரிவித்தார்.

இதையடுத்து ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ பேக் கவர்னர் என்ற முழக்கங்களை எழுப்பியபடி எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை பலமுறை கேரள மாநில அரசு மீறிய நிலையில், தற்போது ஆளுநர் உரையில் புதிய அணை கட்டப்படும் என்று அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கேரள அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்டும் திட்டத்தை ஏற்க முடியாது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் உரிமையை எக்காரணம் கொண்டும் அரசு விட்டுக்கொடுக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரளாவின் திட்டத்தை எல்லா விதத்திலும் தமிழக அரசு எதிர்க்கும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மேலும், கேரள ஆளுநரின் பேச்சு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.