இந்தியா

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைக்கப்படுகிறது !

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைக்கப்படுகிறது !

webteam

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கன மழையாக பெய்து வந்த கனமழை சற்றே குறைந்ததாலும், கேரள மக்களின் நலனை கருத்தில் கொண்டும் நீர்த்திறப்பு அதிகரிகரிக்கப்பட்டு முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்டு வருகிறது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை மேலும் வலுத்து வருகிறது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமுளி, தேக்கடியில் தொடர்ந்து பெய்து வந்த கன மழை தற்போது சற்றே குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைப்பகுதியில் 27 மில்லி மீட்டரும், தேக்கடி 17 மில்லி மீட்டரும் மழை பதிவானது. இதனால் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15,583 கன அடியில் இருந்து விநாடிக்கு 12,831 கன அடியாக குறைந்துள்ளது.

இருந்தாலும் கேரள மக்களின் நலனை கருத்தில் கொண்டும், கேரள அரசின் கோரிக்கையை ஏற்றும் நீர்மட்டத்தை கட்டுக்குள் வைக்கும் பொருட்டு, நீர்வரத்து குறைந்ததால் தேக்கடி மதகு வழியாக தமிழக குடிநீர் மற்றும் தமிழகத்திற்கு விநாடிக்கு 2,200 கன அடி தண்ணீரும், அணையின் 13 மதகுகள் வழியாக கேரளாவிற்குள் விநாடிக்கு 14,600 கன அடி தன்ணீரும் என விநாடிக்கு 16,800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 140.10 அடியாகி 140 அடியை நோக்கி குறைந்து வருகிறது. அணையில் நீர் இருப்பு 7,120 மில்லியன் கன அடியாக உள்ளது.