இந்தியா

ஜியோ 5ஜி சேவை எப்போது? - முகேஷ் அம்பானி வெளியிட்ட மாஸ் அறிவிப்பு

ஜியோ 5ஜி சேவை எப்போது? - முகேஷ் அம்பானி வெளியிட்ட மாஸ் அறிவிப்பு

சங்கீதா

வருகிற தீபாவளிக்குள் ஜியோ 5ஜி சேவை முதற்கட்டமாக மெட்ரோ நகரங்களில் கொண்டுவரப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இண்டட்ரீஸ் நிறுவனத்தின் 45-வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் இன்று மதியம் நடைபெற்றது. இதில் பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, “உலகின் அதிவேக 5ஜி சேவை திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ தயாரித்துள்ளது. வருகிற தீபாவளிக்குள் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் முதற்கட்டமாக ஜியோ 5ஜி இணைய சேவை வழங்கப்பட உள்ளது. இந்த நகரங்களைத் தொடர்ந்து குருகிராம், பெங்களூரு, சண்டிகர், ஜாம்நகர், அகமதாபாத், ஹைதராபாத், லக்னோ, புனே, காந்திநகர் ஆகிய நகரங்களிலும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

வருகிற 2023-ம் ஆண்டு டிசம்பருக்குள் இந்தியாவின் அனைத்து நகரம் மற்றும் தாலுகாவிற்கும் ஜியோ 5ஜி சேவை வழங்கப்படும். இந்தியா முழுவதும் 5ஜி நெட்வொர்க்கை உருவாக்க 2 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. மிகவும் மலிவான விலையில், மிக உயர்ந்த தரம் நிறைந்த டேட்டாவுடன் 5ஜி சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜியோவின் பிராட்பேண்ட் சேவையானது ஏழு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் நாட்டிலேயே மிகப்பெரியதாக உள்ளது. 5ஜி சேவைக்காக மெட்டா, கூகுள், மைக்ரோசாஃப்ட், இண்டெல் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.