Mukesh ambani twitter
இந்தியா

ஊழியர் ஒருவருக்கு ரூ.1,500 கோடி மதிப்பில் வீடு ஒன்றை பரிசளித்த முகேஷ் அம்பானி!

தனது ஊழியர் ஒருவருக்கு தொழிலதிபர் முகேஷ் அம்பானி ரூ.1,500 கோடி மதிப்பில் வீடு ஒன்றைப் பரிசளித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.

Prakash J

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானியும் ஒருவராக உள்ளார். இவர், சமீபத்தில் ஃபோர்ப்ஸ் ஊடகம் வெளியிட்ட பில்லியனர் 2023 பட்டியலில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக முதலிடத்தில் உள்ளார். இவருக்கு முன் அந்த இடத்தில் அதானி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் கெளதம் அதானி இருந்தார். அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு அதானி குழுமத்தின் சொத்துக்கள் சரியத் தொடங்கின.

இதன் காரணமாக பில்லியனர் பட்டியலில் இருந்து கீழிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தது. அதானி, கீழிறங்கியதைத் தொடர்ந்து அம்பானி அந்த இடத்துக்கு முன்னேறினார். இந்த நிலையில், முகேஷ் அம்பானி, தன்னுடைய ஊழியர் ஒருவருக்கு ரூ.1,500 கோடி மதிப்புள்ள வீட்டை பரிசாக அளித்திருக்கும் செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

முகேஷ் அம்பானியின் வலதுகரம் எனச் சொல்லப்படும் மனோஜ் மோடி என்பவருக்குத்தான் இந்தப் பரிசை அவர் அளித்துள்ளார். ‘பிருந்தாவனம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வீடு, 1.7 லட்சம் சதுர அடி பரப்பளவில், 8,000 சதுர அடியில் கட்டடத்தின் தளம் பரவியுள்ளது. 22 மாடிகளைக் கொண்ட இந்த வீடு, தெற்கு மும்பையில் உள்ள மலபார் மலைக்கு அருகில் உள்ள உயர்சந்தைப் பகுதியான நேப்பியன் கடல் சாலையில் அமைந்துள்ளது.

இதில், முதல் ஏழு தளங்கள் கார் பார்க்கிங்கிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டிற்காக, சில பொருட்கள் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடு, டாலட்டி அண்டு பார்ட்னர்ஸ் எல்.எல்.பி. எனும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.

55 வயதான மனோஜ் ஹரிவன்ஜன் மோடி, குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவர், முகேஷ் அம்பானியின் கல்லூரிக் கால நண்பரும்கூட. இவர்கள் இருவரும், மும்பை பல்கலைக்கழகத்தில் வேதியியல் தொழில்நுட்பத்தில் ஒன்றாகப் பயின்றுள்ளனர். பின்னர், 1980களில். ரிலையன்ஸ் குழுமத்தை திருபாய் அம்பானி வழிநடத்தியபோது, அந்த நிறுவனத்தில் மனோஜ் மோடி ஆரம்ப நிலை ஊழியராகச் சேர்ந்துள்ளார். அதற்குப் பிறகு முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீட்டா அம்பானி மற்றும் அவர்களது குடும்பத்தினர்களிடமும் மனோஜ் மோடி, பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பராக இருந்து வருகிறார்.

தற்போது ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவில் இயக்குநராகப் பணியாற்றி வரும் அவர், ரிலையன்ஸ் குழுமம் பல பில்லியன் டாலர் மதிப்பிலான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட மனோஜ் முக்கிய பங்காற்றியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. அதன் விளைவாகத்தான், முகேஷ் அம்பானி இந்தப் பரிசை வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.