புதிய கேரள அரசு பதவியேற்றுள்ள சூட்டோடு வாரிசு விமர்சனத்தையும் எதிர்கொண்டு வருகிறது. இதற்கு, பினராயி விஜயனின் மருமகன் ரியாஸுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதே காரணம். இது தொடர்பாக சற்றே விரிவாகப் பார்ப்போம்.
கேரளாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் பினராயி விஜயனே ஆட்சியை தக்கவைத்துள்ளார். இதன்மூலம் தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சியை பிடித்திருக்கும் பெருமையை அவர் பெற்றுள்ளார். 40 ஆண்டு கால கேரள அரசியலில் ஒரு கட்சி தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வருவது இதுவே முதன்முறை. திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற விழாவில் முதல்வராக இரண்டாம் முறை பதவியேற்றுக் கொண்டார் பினராயி விஜயன். அவருடன் அமைச்சர்களாக புதுமுகங்கள் வாய்ப்பு பெற்றனர்.
இதில் சுற்றுலா மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள முகமது ரியாஸ் பினராயி விஜயனின் மருமகன் ஆவார். மார்க்சிஸ்ட் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்.எஃப்.ஐ) மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ரியாஸ், பின்னர் எஸ்.எஃப்.ஐயின் கோழிக்கோடு மாவட்ட செயலக உறுப்பினராகவும், டி.ஒய்.எஃப்.ஐயின் மாநில இணை செயலாளராகவும் திறம்பட பணியாற்றி இருக்கிறார்.
தற்போது சிபிஐ (எம்) மாநிலக் குழு உறுப்பினராகவும் இருக்கும் ரியாஸ், சி.பி.எம் இளைஞர் அமைப்பான ஜனநாயக வாலிபர் சங்கமான DYFI-ன் தேசிய தலைவர். இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனை கரம்பிடித்தார் இந்த ரியாஸ். ரியாஸுக்கும் வீணாவிற்கும் இடையிலான திருமணம், கேரள முதல்வரின் அதிகாரபூர்வமான இல்லமான கிளிஃப் ஹவுஸில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்தது.
ரியாஸ் 2009-ல் நடந்த மக்களவை தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவரை எம்.கே.ராகவன் 838 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். எம்.கே.ராகவன் 3,42,309 வாக்குகளைப் பெற்றபோது, ரியாஸ் தேர்தலில் 3,41,471 வாக்குகளைப் பெற முடிந்தது. அந்தநேரத்தில், அவர் கட்சியில் பிரபலமான முகமாக இருக்கவில்லை. அதேநேரம், மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் மற்றும் பினராயி விஜயன் அணிகளால் இடையில் கட்சிக்குள் ஏற்பட்ட மோதல்கள் அந்தத் தேர்தலில் அவருக்கு பெரும் பாதகமாக இருந்தது.
ஆனால் இந்த முறை, கட்சி ஒரு வலுவான வாக்காளர் தளத்தைக் கொண்ட பேபூரில் ரியாஸை போட்டியிட வைத்தது. ஏற்கெனவே இங்கு மாவட்டத் தலைவராகவும், டி.ஒய்.எஃப்.ஐ செயலாளராகவும் பணியாற்றியதால், கட்சியின் அடிமட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ரியாஸ் பிரபலமாக இருந்தார். இதுபோக முதலமைச்சரின் மருமகனாக இருப்பது ரியாஸுக்கு ஒரு கூடுதல் நன்மையை கொடுத்தது. முதல் தேர்தலில் சுமார் 800 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினாலும், இந்தத் தேர்தலில் 28,747 வாக்குகள் பெற்று வெற்றி கனியை பறித்திருக்கிறார்.
கொரோனாவை எதிர்த்துப் போராடும் நோக்கில், ரியாஸ் கடந்த வாரம் தனது தொகுதியில் 'நம்மல் பேபூர்' திட்டத்தை தொடங்கினார். பேப்பூரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிமீட்டர்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். திட்டத்தின் ஒரு பகுதியாக தொகுதியில் ஒரு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஆவதற்கு முன்பே இவரின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும், அமைச்சர் என்று அறிவிப்பு வந்தவுடன் அவர் மீது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, ரியாஸை அமைச்சராக நியமிப்பதை எதிர்த்து பாஜகவின் மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் ஃபேஸ்புக் பதிவின் மூலமாக கடுமையாக விமர்சித்திருந்தார். "முதலில் மகள், பின்னர்தான் அமைச்சரவைக்கு முக்கியத்துவம். இதன் மூலம் லீக் முடிவுக்கு வரும்" என்று சுரேந்திரன் தனது ஃபேஸ்புக் பதிவில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த விமர்சனம் ஆரம்பம் இல்லை. ரியாஸ் பல ஆண்டுகளாக அரசியலில் இருந்து, டி.ஒய்.எஃப்.ஐ.யில் தலைமைப் பதவியை வகித்தாலும், தற்போது அவர் ஏற்றிருக்கும் அமைச்சர் பொறுப்பும் இனி முதல்வர் பினராயி விஜயன் உடன் அவர் பயணிக்க போவதும்தான் வரும் நாட்களில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தையும் முதல்வர் பினராயி விஜயனையும் தாக்கபோகும் முக்கிய ஆயுதமாக இருக்கும். கட்சியின் இளைஞர் பிரிவின் பிரதிநிதியாக ரியாஸ் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். டி.ஒய்.எஃப்.ஐயின் தேசியத் தலைவராக, டெல்லியில் நடைபெற்ற என்.டி.ஏ அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ரியாஸ் தீவிரமாக செயல்பட்டார். இதில் சி.ஏ.ஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உட்பட அடக்கம்.
அப்போது விமர்சனங்களை சந்திக்காத ரியாஸ் இப்போது அமைச்சரவையின் ஒரு பகுதியாக இடம்பெற்ற நிலையில் அவரை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. ஏற்கெனவே ஷைலஜா டீச்சருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படாதது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அதனை தொடர்புபடுத்தி தற்போது ரியாஸையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ஏற்கெனவே கடந்த முறை பினராயி விஜயன் அரசாங்கம் எதிர்கொண்ட முக்கிய பிரச்னை - தொழில்துறை அமைச்சரும், சிபிஐ மூத்த தலைவருமான ஈ.பி.ஜெயராஜன் தனது உறவினர்களுக்கு அரசு வேலை வாங்கிக்கொடுத்த விவகாரம்தான். இதன் காரணமாக ஜெயராஜன் அமைச்சரவையில் இருந்து விலக வேண்டியிருந்தது.
இதை எதிரிக்கட்சிகள் பிரசாரத்தில் கடுமையாக முன்வைத்தனர். எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் செனித்தலா இதேபோல் 15 வாரிசு விவகாரங்களை வெளிப்படுத்தி இருந்து பினராயி விஜயன் அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.
இப்படியான ஒரு நிலையில்தான் ரியாஸ் குறித்து விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளது. இப்போதுதான் அவர் பதவியேற்றுள்ளார். அதற்குள் நிகழ்ந்து வரும் விமர்சனங்கள் அடுத்தடுத்த நாட்களில் அதைத் தொடர்கதையாக்கி பினராயி விஜயன் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
- மலையரசு