கர்நாடக மாநிலம் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூரு விஜயநகர் லே-அவுட்டில் 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில், சித்தராமையா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த நில முறைகேடு விவகாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, லோக் ஆயுக்தாவின் மைசூரு பிரிவு அதிகாரிகளுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடித்து அறிக்கையை தாக்கல்செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, லோக் ஆயுக்தா காவல்துறையினர் முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜூன சாமி, நிலத்தின் முன்னாள் உரிமையாளர் தேவராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்க உள்ள நிலையில், மூடா நில முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. கர்நாடக அரசியலில் புயலை வீசியுள்ள இந்தச் சம்பவத்தில், முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், நில முறைகேடு விவகாரம் தொடர்பாக, சித்தராமையாவின் மனைவி பார்வதி, மூடா அமைப்பிற்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், தனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தைத் திருப்பி தருவதாகத் தெரிவித்துள்ள பார்வதி, மூடா தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அதில் அவர், எனது கணவர் மாநில முதலமைச்சரான சித்தராமையா, தனது 40 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் நெறிமுறைகளோடு வாழ்ந்துள்ளார். எந்தவொரு கறையும் இல்லாமல் பொது வாழ்க்கையில் இருந்துள்ளார். என் கணவரின் மானம், கண்ணியம் மற்றும் மன அமைதி என்பது அனைத்தையும்விட முக்கியமானது.. இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிறகும், எனக்கோ என் குடும்பத்துக்கோ ஆதாயம் தேடவில்லை. இது நான் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவு” எனத் தெரிவித்துள்ளார்.
இதை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. நிலத்தைத் திரும்ப ஒப்படைப்பதன்மூலம் சித்தராமையா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் என அக்கட்சி விமர்சித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, ”சித்தராமையாவின் மனைவி 14 மனைகளின் திருப்பித் தர முடிவு செய்தது, அவர் செய்த தவற்றை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு சமம். சித்தராமையா தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இது ஓர் அரசியல் நாடகம். சட்டத் தடைகளில் இருந்து தப்பிக்கும் நோக்கம்” அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்துப் பேசிய முதல்வர் சித்தராமையா, “மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் இழப்பீடாக தந்த நிலங்களை என் மனைவி பார்வதி திருப்பி தந்துள்ளார். என்மீதான வெறுப்பு அரசியலால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். மூடா ஊழல் வழக்கில் தன்னையும் மற்றவர்களையும் காப்பாற்ற அவர் இந்த தனிப்பட்ட முடிவை எடுத்துள்ளார். நான் எந்த ஊழலும் செய்யவில்லை. என்னுடைய குழு சட்டரீதியாக இதனை எதிர்கொண்டு வருகிறது. என் மனைவி மிகுந்த வருத்தத்தில் இருந்தார்.
பின்னரே நிலங்களை திருப்பியளிக்க முடிவுசெய்தார். அவர் சர்ச்சைகளை விரும்புவதில்லை. அவருடைய முடிவுகளை நான் மதிக்கிறேன்.என்னுடைய மனைவியின் நிலம் அவரது சகோதரர் பரிசாக வழங்கியது. ஆனால், மூடா அதனை கையகப்படுத்தி வேறு நிலம் வழங்கியது. அதற்கு மாற்றாக நாங்கள் வெவ்வேறு பகுதிகளில் வீட்டுமனைகள் கேட்டோம். அவர்கள்தான் விஜயநகரில் வழங்கினார்கள். என்மீது அரசியல் வெறுப்புணர்வை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் பொய் புகார் உருவாக்கி என் குடும்பத்தை சர்ச்சைக்கு இழுத்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.