கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீதான முடா நில முறைகேடு புகார் குறித்து விசாரிக்கத் தடையில்லை என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில், எம்பி, எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இன்று முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
சித்தராமையா மீது கர்நாடக லோக் ஆயுக்தா மைசூரு மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்து டிசம்பர் 24 ஆம்தேதி அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிநேகமயி கிருஷ்ணா என்ற சமூக செயற்பாட்டாளர் தொடர்ந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சிறப்பு நீதிமன்ற உத்தரவு குறித்து பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
புகாருக்குப் பொறுப்பேற்று சித்தராமையா பதவி விலகக்கோரி கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். பெங்களூருவில் சித்தராமையா வீட்டின் முன்பாக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
மைசூரு நகர வளர்ச்சி ஆணையமான முடா என்பது Mysuru Urban Development Authority. இந்த அமைப்பு முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்குச் சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தில் வீட்டுமனை கட்டுவதற்கு பயன்படுத்தியதற்காக 14 வீட்டுமனைகளை மாற்று நிலமாக ஒதுக்கீடு செய்தது. இதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக சிநேகமயி கிருஷ்ணா என்ற சமூக ஆர்வலர் புகார் அளித்திருந்தார். Kasare கிராமத்தில் சர்வே எண் 464, மைசூரு தாலுகாவில் Kasaba hobli நிலங்களில் முதலமைச்சரின் மனைவிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரில், தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகளிடம் அறிக்கை பெற்ற ஆளுநர் தவார் சந்த் கெலாட், இதுபற்றி பதிலளிக்க முதலமைச்சர் சித்தராமையாவுக்கு உத்தரவிட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யவும் ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனை எதிர்த்து சித்தராமையா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். விசாரணையில் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, இந்த விவகாரம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.