இந்தியா

காவலர் தேர்வு: நெஞ்சில் குறியிடப்பட்ட சமூகத்தின் பிரிவு!

காவலர் தேர்வு: நெஞ்சில் குறியிடப்பட்ட சமூகத்தின் பிரிவு!

webteam

காவலர்கள் தேர்வில் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பிரிவுகளை, மருத்துவ சோதனையின் போது நெஞ்சில் குறியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.

மத்தியப்பிரதேசம், தார் மாவட்டத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வுகள் நடைபெற்றன. இதையடுத்து தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். அப்போது அங்கிருந்த விண்ணப்பதாரர்களில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் நெஞ்சில், அவர்களின் சமூகத்தை குறியிட்டு எழுதுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி எழுதப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. அத்துடன் இந்த தேர்வின் போது தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களின் உயரம் 165 செ.மீ என குறியிடப்பட்டதாகவும், பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி பிரிவுவை சேர்ந்தவர்களுக்கு 168 செ.மீ என குறிப்பிடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீரேந்திர சிங், ‘இதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை. இதுதொடர்பாக ஆய்வு செய்துவருகிறோம். இந்த சம்பவம் தொடர்பாக விரைவில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். சமூகத்தை நெஞ்சில் குறியிடுமாறு எங்கள் தரப்பில் இருந்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை’ என்று தெரிவித்தார். இதுதொடர்பாக ஆய்வு செய்ய, மருத்துவ சோதனை செய்த மருத்துவமனை நிர்வாகமும் உத்தரவிட்டுள்ளது.