மத்தியப் பிரதேசத்தில் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்று தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதித்து இந்திய மருந்து தரக்கட்டுப்பாடு உத்தரவிட்டது. இந்நிலையில் போபாலில் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தீபக் மராவி என்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 12 ஆம் தேதி கோவாக்சின் தடுப்பூசி போட்டுவிட்டு வீடு திரும்பிய தீபக்குக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
டிசம்பர் 21-ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமானதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இருப்பினும் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில், தீபக் உடலில் விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தீபக்கின் உயிரிழப்புக்கும் தடுப்பூசிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இதய செயலிழப்பு ஏற்பட்டு தீபக் உயிரிழந்திருக்கலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.