இந்தியா

"பெண்கள் உரிமையையும், ஆண்களே தீர்மானிக்கின்றனர்” - எம்.பி கனிமொழி காட்டம்

"பெண்கள் உரிமையையும், ஆண்களே தீர்மானிக்கின்றனர்” - எம்.பி கனிமொழி காட்டம்

நிவேதா ஜெகராஜா

பெண்களின் திருமண வயதை உயர்த்தி, அதை 21 வயதென்று நிர்ணயிக்கும் மசோதா, கடந்த டிச.16ம் தேதி மத்திய அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. பல தரப்பிலிருந்து பாராட்டுகளையும் எதிர்ப்புகளையும் இம்மசோதா பெற்றுவந்த நிலையில், தற்போது இம்மசோதா தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் நாடாளுமன்ற ஆய்வுக்குழுவில் பெண் எம்.பி. ஓரேயொருவர் மட்டுமே இருப்பதை, தமிழகத்தை சேர்ந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியுள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “இந்தியாவில் 110 பெண் எம்.பி.க்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவின் ஒட்டுமொத்த இளம் பெண்கள் தொடர்பான மத்திய அரசின் ஒரு முக்கிய முடிவில், அவர்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கான நாடாளுமன்ற ஆய்வுக்குழுவில் 30 ஆண் எம்.பி.க்களுடன் ஒரேயொரு பெண் எம்.பி. மட்டுமே உள்ளார். பெண்களுக்கான உரிமையைத் தொடர்ந்து ஆண்களே தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே தொடர்கிறார்கள்" என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக இருக்கும் நிலையில், அதை மேலும் மூன்று ஆண்டுகள் உயர்த்தும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.