மத்தியப் பிரதேச அரசுத் துறைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
ம.பி. தலைநகர் போபாலில் இதை தெரிவித்த அவர், வனத்துறை தவிர்த்து மற்ற அனைத்து துறைகளிலும் இந்த இடஒதுக்கீடு பொருந்தும் என்று கூறினார். ப்ளஸ் 2 வகுப்பில் 75 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கான கல்லூரிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் சவுகான் அறிவித்துள்ளார். தான் முதலமைச்சரான பிறகு மத்தியப் பிரதேசத்தில் பள்ளிக்குச் செல்வோம் என்ற திட்டத்தின் கீழ் 43 லட்சம் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டதாகவும் சவுகான் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்களுடைய மகள்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை அனைத்து துறைகளிலும் அளிக்கிறேன். வனத்துறையைத் தவிர்த்து மற்ற துறைகளில் இது அமல்படுத்தப்படும். பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தி வருகிறோம். பிரதமர் மோடியின் தலைமையில் புதிய இந்தியா படைக்கும் பணியில் கரம் கோர்த்துள்ளோம்” என்று சவுகான் கூறினார்.