இந்தியா

ம.பி: ஆம்புலன்ஸ் தராததால் தாயின் சடலத்தை 80 கி.மீ பைக்கில் கொண்டு சென்ற மகன்!

ம.பி: ஆம்புலன்ஸ் தராததால் தாயின் சடலத்தை 80 கி.மீ பைக்கில் கொண்டு சென்ற மகன்!

webteam

தாயின் சடலத்தை 80 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனத்தில் வைத்து கொண்டு சென்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூரில் உள்ள கோடாரு கிராமத்தைச் சேர்ந்த ஜெய்மந்திரி யாதவ் என்பவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். செவிலியர்களின் அலட்சியத்தால் தனது தாய் உயிரிழந்ததாக, அவரது மகன் சுந்தர் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து தாயின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், தனியார் ஆம்புலன்ஸிடம் கேட்டபோது ஐந்தாயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால் பணம் இல்லாததால் நூறு ரூபாய்க்கு மரக்கட்டைகளை வாங்கிய அவர், அதில் தனது தாயின் உடலை அதில் கட்டிக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் வைத்து சொந்த ஊர் சென்றுள்ளார்.

தாயின் சடலத்துடன் சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனத்திலேயே அவர் பயணித்தது காண்போரை கண்கலங்க வைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த மருத்துவமனை கண்காணிப்பாளர், மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்றும், பதிவு செய்த பின்னரே நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படும் என்றும் கூறியுள்ளார்.