இந்தியா

ம.பி: காதலி ஏமாற்றியதால் ஆத்திரத்தில் தீ வைப்பு... 7 அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு

ம.பி: காதலி ஏமாற்றியதால் ஆத்திரத்தில் தீ வைப்பு... 7 அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு

ச. முத்துகிருஷ்ணன்

மத்தியப் பிரதேசத்தில் காதலி ஏமாற்றியதால் ஆத்திரத்தில் அவரது பைக்கிற்கு காதலன் தீ வைத்தபோது, தீ மளமளவென அருகிலிருந்த குடியிருப்புகளுக்கு பரவி 7 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கட்டட தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய 9 பேர் தீயணைப்புப் படையினரால் மீட்கப்பட்டனர். சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குடியிருப்புப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தனர். அப்போது இளைஞன் ஒருவன் கட்டடப் பகுதிக்குள் நுழைந்து வேண்டுமேன்றே பைக் நிறுத்துமிடத்தில் தீ பற்ற வைக்கும் காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்தனர் காவல்துறையினர்.

இளைஞர் ஒரு குறிப்பிட்ட பைக்கில் தீ பற்ற வைக்க, அது அங்கிருந்த அனைத்து வாகனங்களுக்கும் பரவி கட்டடமே தீக்கிரையானதை காவல்துறையினர் உறுதிசெய்தனர். இதையடுத்து தீ வைத்த 27 வயதேயான சஞ்சய் என்ற ஷுபம் தீட்சித் என்ற இளைஞனை காவல்துறையினர் அடையாளம் கண்டு கைது செய்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தன் காதலியை பழிவாங்கவே தீ வைத்ததாக சஞ்சய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

“அந்த குடியிருப்பில் வசித்து வரும் பெண்ணை நான் காதலித்து வந்தேன். அவளுக்கு பண உதவி செய்துள்ளேன். ஆனால் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நான் அவளுடன் சண்டையிட்டேன். என் பணத்தையாவது திருப்பி தருமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அவளும் அவளது தாயும் பணம் தராமல் என்னுடன் பதிலுக்கு சண்டையிட்டனர். அதனால் அவளது பைக்கிற்கு தீ வைக்க அதிகாலையில் வந்தேன். ஆனால் எல்லா வாகனங்களும் தீ பிடித்து, கட்டடமே தீக்கிரையாகி விட்டது” என்று வாக்குமூலம் அளித்துள்ளான் சஞ்சய்.

கட்டடம் தீக்கிரையானபோது அங்கு வசித்து வந்த காதலியும் அவளது தாயும் பாதுகாப்பாக வெளியேறி விட்டனர். ஆனால் 2 கட்டட தொழிலாளர்கள், ஒரு கல்லூரி மாணவி, ஒரு பேருந்து டிப்போ ஊழியர், ஒரு மதுபானக் கடை ஊழியர், வீட்டுவேலை செய்து வந்த பெண், அந்த கட்டடத்திற்கு புதிதாக குடியேறிய ஒருவர் என ஏழு அப்பாவிகள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் தீப்பற்றியதால் கட்டடத்திற்குள் சிக்கி பலியாகினர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹ 4 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். காதலியை பழி வாங்கச் செய்த செயலால் 7 அப்பாவிப் பொதுமக்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.