இந்தியா

ம.பி கால்வாயில் கவிழ்ந்த பேருந்து : நீரில் குதித்து இருவரை மீட்டெடுத்த 18 வயது மாணவி

ம.பி கால்வாயில் கவிழ்ந்த பேருந்து : நீரில் குதித்து இருவரை மீட்டெடுத்த 18 வயது மாணவி

Veeramani

மத்தியப் பிரதேசம் போபால் அருகே ஒரு கிராமத்திலுள்ள கால்வாயில் மூழ்கிய பேருந்திலிருந்து, இரண்டு பேரை 18 வயது மாணவி சிவ்ராணி லூனியா துணிச்சலுடன் காப்பாற்றினார்.

போபால் அருகேயுள்ள சர்தா கிராமத்தில் உள்ள கால்வாய் கரையின் குடிசையில் வசிக்கும் 18 வயதான மாணவி சிவ்ராணி லூனியா, அப்பகுதியில் ஒரு பேருந்து கால்வாயில் மூழ்குவதைக் கண்டார். அக்காட்சியை கண்டவுடன் சிவ்ராணி லூனியா ஒருநொடி கூட தயங்காமல் 40 அடி ஆழமுள்ள கால்வாயில் குதித்தார். அப்போது தண்ணீரில் மூழ்கிய ஒரு பெண் மூச்சுவிடமுடியாமல் தவிப்பதை கண்ட லூனியா, உடனடியாக அப்பெண்ணை சுமந்துகொண்டு கால்வாய் கரைக்கு நீந்தி காப்பாற்றினார். கிராமவாசிகளின் பராமரிப்பில் அப்பெண்ணை விட்டுவிட்டு, மீண்டும் லூனியா கால்வாயில் குதித்து, ஒரு வயதான நபரையும் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டு வந்தார். 

இதுபற்றி பேசிய உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் ரிதி பதக், அந்த இளம்பெண் ஒரு பெண் மற்றும் வயதான ஆணை மீட்டதாக கூறினார். லூனியாவின் வீரதீர செயலை பாராட்டிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் “மிகவும் வீரத்துடன் இருவரை காப்பாற்றிய மகள் சிவ்ரானியை பாராட்டுகிறேன், அவரை நினைத்து மாநிலமே பெருமை கொள்கிறது” என கூறினார்.

பேருந்து கால்வாயில் மூழ்கிய இந்த விபத்தில் ஏழு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர், அதில் பிங்கி குப்தா என்ற நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.