செய்தியாளர்: உதய் செந்தில்.
விரக்தியின் உச்சிக்கே சென்றாலும் தன்னம்பிக்கை வேள்வியை மனதில் ஏற்றி, கைப்பிடித்து அடுத்த கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் வாழ்க்கை பாடங்களாக அமைந்தவை ரத்தன் டாடாவின் வார்த்தைகள். தொழில்துறையில் மட்டுமல்ல, இன்றைய நவீன இளைஞர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் கருத்துகளை அள்ளித் தெளிப்பதிலும் ஜாம்பவனாக திகழ்ந்தவர் ரத்தன் டாடா.
இன்று அவர் தன் 86-வது வயதில், வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். இத்தருணத்தில், உத்வேகம் அளிக்கும் அவரது வார்த்தைகள் சிலவற்றை இங்கே காணலாம்...
“வேகமாக நடக்க வேண்டும் என்றால் தனியாக நடந்து செல்லுங்கள்; தொலைத்தூரம் நடக்க வேண்டும் என்றால் குழுவாக மட்டுமே பயணிக்க முடியும்”
என்ற ரத்தன் டாடாவின் வார்த்தைகள் கூட்டு உழைப்பின் மகத்துவத்தை விளக்கின.
“மக்கள் உங்களை பின் தொடர வேண்டுமென்றால், நீங்கள் அவர்களை அன்போடு வழிநடத்த வேண்டும்”
என ஒரு தலைவருக்கான பண்பையும் அறுதியிட்டுக் கூறினார் ரத்தன் டாடா.
“ஆழ்ந்த சிந்தனையும், கடின உழைப்பும் இல்லாமல் பெரிய விஷயங்கள் எதையும் அடைய முடியாது.”
என்பது ரத்தன் டாடாவின் மற்றுமொரு பொன்மொழி.
“மற்றவர்கள் உங்களை நோக்கி எறியும் கற்களை எடுத்துக் கொண்டு ஒரு நினைவு சின்னத்தை கட்டியெழுப்புங்கள்.”
என்ற சொற்களை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது...
“மற்றொருவரின் பாணியை பின்பற்றுபவர் சிறிது காலம் தான் வெற்றிபெற முடியும், அவரால் வெகுதூரம் செல்ல முடியாது.”
என தனக்குரிய பாணியில் கூறிய அவர்,
“சரியான முடிவை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை , நான் முடிவை எடுத்தப்பின் அதனை சரியாக்குவேன்.”
என்று கூறி, தன் கூற்றுக்கு தானே இலக்கணமாக வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவரை என்றும் நினைவுகூர்ந்து வாழ்வோம்!