இந்தியா

அடுத்தடுத்து அதிகளவில் பிடிபடும் போதைப்பொருட்கள்-மகாராஷ்டிரா, குஜராத்தின் ஷாக் ரிப்போர்ட்!

அடுத்தடுத்து அதிகளவில் பிடிபடும் போதைப்பொருட்கள்-மகாராஷ்டிரா, குஜராத்தின் ஷாக் ரிப்போர்ட்!

Veeramani

மும்பையில் சினிமா நட்சத்திரம் ஷாருக்கான் மகன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சர்ச்சை  தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் பெரிய அளவில் போதைப்பொருட்கள் பிடிபட்டுள்ளன.

போதைப்பொருள் தடுப்பு அமைப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜல்காவ்ன் மாவட்டத்திலுள்ள ரண்டோல் என்கிற பகுதியில் சோதனை நடத்தியது. அப்போது, ஒரு வாகனத்தில் கஞ்சா கடத்திய இரண்டு நபர்களை போதைப்பொருள் தடுப்பு அமைப்பு கைது செய்தது. அந்த வாகனத்தை சோதனையிட்டதில் 1500 கிலோ கஞ்சா பிடிபட்டது. இந்த போதைப்பொருள் ஆந்திரா மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்திலிருந்து கடத்தப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

சென்ற மாதம் இதேபோலவே  1150 கிலோ கஞ்சா மகாராஷ்டிர மாநிலத்தில் பிடிபட்டது, அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி அன்று போலீசார் சோதனை நடத்தியபோது ஒரு சரக்கு போக்குவரத்து வாகனத்தில் அடுக்கி வைத்திருந்த மூட்டைகளை கைப்பற்றியது. இந்த மூட்டைகளில் ஆயிரம் கிலோவுக்கு மேல் கஞ்சா கடத்தப்பட்டது தெரியவந்தது.

இதேபோலவே குஜராத் மாநிலத்தில் 120 கிலோ ஹெராயின் பிடிபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் போலீஸ் தீவிரவாத எதிர்ப்புப் படை நடத்திய சோதனையில் 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை விசாரணை செய்தபோது இவர்கள் கடல் மூலமாக ஹெராயின் கடத்தல் செய்து பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் ஆப்கானிஸ்தானிலிருந்து அனுப்பப்பட்ட ஹெராயின் பாகிஸ்தான் மூலமாக கடல்வழியாக கடத்தப்பட்ட விவரம் தெரியவந்தது. பாகிஸ்தான் நாட்டு படகில் கொண்டுவரப்பட்ட இந்த போதைப்பொருள் குஜராத்தைச் சேர்ந்த கடத்தல்காரர்களிடம் கடலிலேயே கைமாற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வரும் ஒரு நபர் தலைமறைவாகி விட்டார். ஏற்கனவே 2019 ஆம் வருடம் 227 கிலோ ஹெராயின் கடத்தியதாக இந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குஜராத் போலீஸ் படையின் தீவிரவாத எதிர்ப்பு பிரிவு கடந்த ஒரு வருடத்தில் கள்ளச்சந்தையில் ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்புடைய ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டு குஜராத்தில் உள்ள முண்ட்ரா முந்துரா துறைமுகத்துக்கு வந்து சேர்ந்த 3000 கிலோ ஹெராயின் பிடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போலவே மகாராஷ்டிரா குஜராத் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடத்தப்படும் போதைப்பொருள் அடிக்கடி பிடிபடுவது, இத்தகைய கடத்தல்கள் அதிகரித்து வருவதை காட்டுவதாக அதிகாரிகள் கருதுகிறார்கள்.

- கணபதி சுப்ரமணியம்