வயநாடு முகநூல்
இந்தியா

மண்ணோடு மண்ணாக புதைந்த வீடுகள்! அழுகுரல்கள் ஒலிக்கும் மண் குவியலாக மாறிய வயநாடு.. 270ஐ தாண்டிய பலி!

PT WEB

வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270ஐ தாண்டியுள்ளது. 200க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ள நிலையில், மீட்புப் பணியை மேலும் துரிதப்படுத்த இரும்பு பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது.

மக்களை வசீகரித்த வயநாடு, அழுகுரல்கள் ஒலிக்கும் மண் குவியலாக மாறியுள்ளது. அதி கனமழையால், வயநாடு மாவட்டத்தின் முண்டக்கை, சூரல்மலை, ஆட்டமலா, நூல்புழா பகுதிகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. இன்ப, துன்பங்கள் பார்த்த வீட்டின் சுவர்கள் மண்குவியலுக்கு அடியில் இடிந்து கிடந்தாலும் தனது நினைவுகளை, தாங்கி நிற்கின்றன.

இத்தனை துயர் நிறைந்த பகுதியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், மீட்புப் பணியில் பல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 2 நாள்களாக நடைபெற்ற மீட்புப் பணிகளில் 167 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 67 உடல்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மனோரம்மா செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, 270 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்து 592 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அதில், 99 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாகவும், மற்றவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வயநாடு மாவட்டத்தில் 45 முகாம்கள் உள்ள நிலையில், பாதுகாப்பு காரணத்திற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதிகளவு பாதிப்புகளை சந்தித்துள்ள முண்டக்கை, சூரல்மலை மீட்புப்பணிகளை மேற்கொள்வதில் போதிய சாலை வசதிகள் இல்லாததால் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சிலரையும் முகாம்களுக்கு அழைத்து வருவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனை தீர்க்கும் வகையில் தற்காலிக இரும்பு மேம்பாலம் அமைக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இந்த பாலம் அமைக்கப்பட்டால், இடிபாடுகள், பாறைகள் உள்ளிட்டவற்றை அகற்ற கனரக வாகனங்களை எளிதில் இயக்க முடியும். இதனால், மீட்பு பணிகளை மேலும் துரிதப்படுத்தலாம் என மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

அதிகாரப்பூர்வமாக பேரிடர் மீட்புப் பணிகள் மேற்கொள்வோரை தவிர வேறு யாரும் வயநாடு பகுதிக்கு செல்ல வேண்டாம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். வயநாடு துயரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்க விரும்புவோர் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கலாம் என பினராயி விஜயன் கூறியிருந்த நிலையில், தமிழக அரசு உள்ளிட்ட மாநில அரசுகள், பல்வேறு கட்சிகள், தொழிலதிபர்கள் உள்ளிடோர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். அத்துடன் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் வழங்கி வருகின்றனர்.