இந்தியா

விவசாயிகளை விட வேலையில்லாதவர்களின் தற்கொலை அதிகரிப்பு : அரசின் புள்ளிவிவரத்தில் தகவல்

விவசாயிகளை விட வேலையில்லாதவர்களின் தற்கொலை அதிகரிப்பு : அரசின் புள்ளிவிவரத்தில் தகவல்

webteam

இந்தியாவில் விவசாயிகளை விட வேலையில்லாதவர்களின் தற்கொலை அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் மகாராஷ்டிராவிற்கு‌ அடுத்தபடியாக தமிழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2018ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 516 பேர் தற்கொலை செய்துள்ளதாக தேசிய‌ குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 3.6 விழுக்காடு அதிகம்‌. அதிக‌பட்சமாக மகாராஷ்டிராவில் 2018ஆம் ஆண்டில் 17 ஆயிரத்து 972 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. 13 ஆயிரத்து 896 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரம் கூறுகிறது. இதற்கு அடுத்தபடியாக மேற்குவங்கத்தில் 13 ஆயிரத்து 225 பேரும், மத்திய பிரதேசத்தில் 1‌1 ஆயிரத்து 775 பேரும், கர்நாடகாவில் 11 ஆயி‌ரத்து 561 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

2018ஆம் ஆண்டு சராசரியாக நாள்தோறும், வேலை இல்லாதவர்கள் 35 பேரும், சுயதொழில் செய்வோர் 36 பேரும் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளனர். இந்த வருடத்தில் தற்கொலை செய்த வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 936 ஆகவும், சுயதொழில் செய்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 149 ஆகவும் உள்ளது.

விவசாயத் துறையைச் சேர்ந்த 10 ஆயிரத்து 349 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை‌ அதிகரித்துவிட்டதாக பரவலாக பேசப்படும் நிலையில், வி‌வசாயிகளைவிட வேலை இல்லாதவர்களின் தற்கொலை அதிகரித்துள்ளது புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது.

2018ல் 42 ஆயிரத்து 391 பெண்கள் தற்கொலை செய்துள்ளதாகவும், அவர்களில் 22 ஆயிரத்து 937 பேர் குடும்பத் தலைவிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களில், அரசு ஊழியர்கள் ஆயிரத்து 707 பேர், தனியார் நிறுவன ஊழியர்கள் 8 ஆயிரத்து 246 பேர், பொதுத்துறை ஊழியர்கள் 2 ஆயிரத்து 22 பேர், மாணவர்கள் 10 ஆயிரத்து 159 பேர் தற்கொலை செய்துள்‌ளனர்.