இந்தியா

நெருங்கும் தேர்தல் - ஊடகங்களில் எதிர்மறை பிரச்சாரத்தை கண்காணிக்க பாஜக அரசு திட்டம்

rajakannan

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஊடகங்களில் நிலவும் எதிர்மறையான கருத்துக்களை கண்காணிக்க பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. 

சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக முடிந்தது, பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதனால், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதற்காக வியூகங்களை அக்கட்சி வகுத்து வருகிறது. இளைஞர்கள், பெண்கள், பட்டியல் இனத்தவர்கள் என தனித்தனியாக கவனம் செலுத்தி வாக்குகளை சிதறாமல் பெற பாஜக முயற்சிகளை தொடங்கியுள்ளது. அதற்காக பொறுப்பாளர்களையும், குழுக்களை உருவாக்கியுள்ளது. 

இதற்கிடையே, சமூக, டிஜிட்டல் தளங்களில் தங்களுடைய ஆட்சிக்கு எதிராக நிலவி வரும் எதிர்மறையான கருத்துக்களை கண்காணிக்கவும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற போது, எவ்வித பெரிய விமர்சனங்களையும் எதிர்கொள்ளவில்லை.

ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி உள்ளிட்ட திட்டங்களுக்கு பிறகு பாஜக அரசுக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்பது உள்ளிட்ட விஷயங்கள் வைத்து சமூக வலைதளங்கள் அதிகம் கமெண்டுகள் வரும். இப்படி தங்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்மறை பிரச்சாரங்களை கண்காணிக்க பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

இதில் முக்கமான விஷயம் என்னவென்றல், அரசிடம் உள்ள கண்காணிப்பு நிறுவனங்களை பயன்படுத்தப் போகிறதா அல்லது தனியார் நிறுவனங்களை அணுக போகிறதா என்பது தான். சமீபகாலமாக மத்திய அரசின் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் இருந்து இந்த கேள்விகள் எழுகின்றன.

சமூக, டிஜிட்டல் ஊடகங்களை கண்காணிக்கும் பொருட்டு தனியார் கண்காணிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசின் செய்தி நிறுவனமான பிஐபி சார்பில் டெண்டர் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்களுடைய விண்ணப்பத்தை பிப்ரவரி 6ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு துறையின் கீழ் இயங்கும் பெய்சில் (BECIL), நிறுவனமும் ஏற்கெனவே சமூக வலைதளங்களை ஆய்வு செய்வதற்காக நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களிடம் டெண்டர் கோரி இருந்தது. அதனை தொடர்ந்து பிஐபி நிறுவனமும் தற்போது புதிய டெண்டரை அறிவித்துள்ளது. 

ஏற்கெனவே ஊடகங்களை கண்காணித்து வரும் டிஜிட்டல் மீடியா கண்காணிப்பு மையத்துடன் இணைந்து தொலைத் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு துறையின் ‘புதிய மீடியா விங்’இந்த நிறுவனங்கள் செயல்படும். சமூக வலைதளங்களில் உள்ள குற்றங்களை தடுப்பதற்காகவே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

ஊடகங்களை 360 டிகிரியில் கண்காணிக்க வேண்டும் என்பது அரசு செய்தி நிறுவன(பிஐபி) அதிகாரிகளின் நீண்டநாள் கோரிக்கை என்று அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும், “இதில் தேர்தல் தொடர்பாக திட்டம் எதுவும் இல்லை. ‘நியூஸ் மீடியா விங்’டெண்டர் குறித்து பிஐபிக்கு தெரியாது. ஊடக கண்காணிப்பு நிறுவனங்கள் தங்களுக்கு ஆய்வுகளை பகிர்ந்து கொள்வதில்லை. அச்சு ஊடகங்களைத் தான் பிஐபி அதிக அளவில் கண்காணிக்கிறது. அதனால், சமூக, டிஜிட்டல் உள்ளிட்ட எல்லா தளங்களையும் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டியுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார். 

முன்னதாக, சமூக வலைதளங்கள் கண்காணிப்பது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புலனாய்வு அமைப்புகள் மற்றும் உள்துறை அமைச்ச அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. நாட்டின் பாதுகாப்பு கருதி சமூகவலைதளை கண்காணிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

courtesy - the print