நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 11 வரை நடக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற அலுவல்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந் வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். மறைந்த மக்களவை உறுப்பினர் வினோத் கண்ணா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பல்லவி ரெட்டி ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற இரு அவைகளும் முதல் நாளில் செயல்படாது என்று தெரிகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஜூலை 17 அன்று மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.