இந்தியா

“இதுக்கு முன்னே இப்படி இல்லை”- ஜூலையில் பருவமழை பற்றாக்குறை

webteam

பருவமழை தொடங்கி அவ்வப்போது பெய்துவந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலையில் மழை குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கினாலும், ஜூலையில் தடுமாறியுள்ளது. நாடு முழுவதும் ஆண்டுதோறும் பெய்யும் மழையின் அளவைவிட பத்து சதவீதம் குறைந்துள்ளது. ஜூலை மாதத்தில் வடகிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் மிகக்குறைவான அளவே மழை பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இரண்டாவது பருவகாலம் பற்றிய வானிலை அறிக்கையில், செப்டம்பரில் கனமழைக்கு வாய்ப்பு  இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக வழக்கமாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மழையின் அளவு சராசரியாக 104 சதவீதமாக இருக்கும். ஆனால் ஆகஸ்ட் மாதம் 97 சதவீதம் மட்டுமே மழை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

“செப்டம்பர் மாதத்தில் பசிபிக் பகுதியில் ஏற்படும் வெப்பம் மற்றும் காற்றின் மாறுதல்களால் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக அது கோடை மழைக்கு உதவியாக இருக்கும். ஒட்டுமொத்தமாக பார்த்தால் சாதாரண பருவமழையே எதிர்பார்க்கப்படுகிறது” என்கிறார் இந்திய வானிலை மைய இயக்குநர் மிருத்ஞ்சய மஹோபாத்ரா.   

நடப்புப் பருவத்தின் பாதியில் மழையின் அளவு பற்றாக்குறையாகவோ அல்லது உபரியாகவோ இல்லை. ஜூன் மாதத்தில் கூடுதலாக 18 சதவீத மழை பதிவாகியுள்ளது. இந்தியாவின் ஈரப்பதமான ஜூலை மாதம் பற்றாக்குறையான மழையுடன் முடிந்துவிட்டது.