இந்தியா

’சேட்டை தாங்கமுடியவில்லை’ - குரங்கை காவல்நிலையம் அழைத்துவந்த நபரால் பரபரப்பு

’சேட்டை தாங்கமுடியவில்லை’ - குரங்கை காவல்நிலையம் அழைத்துவந்த நபரால் பரபரப்பு

Sinekadhara

குரங்குகளின் சேட்டையால் விரக்தியடைந்த நபர் ஒரு குரங்கை பிடித்து தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி காவல்நிலையம் கொண்டுவந்து ஒப்படைத்த விநோத சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நீண்ட நாட்களாக குடியிருப்புப் பகுதிகளில் சுற்றிவந்த குரங்குகள் அங்கு வசிப்பவர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுத்துவந்துள்ளது. குரங்குகளை விரட்ட வழிதெரியாமல் விரக்தியடைந்த குடியிருப்புவாசி ஒருவர், தனது வீட்டு ஜன்னலில் அமர்ந்திருந்த குரங்கை பிடித்து, தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி, காவல்நிலையம் அழைத்துவந்தார். பிடிக்கப்பட்ட குரங்கும், அமைதியாக பின்சீட்டில் அமர்ந்தவண்ணம் அவருடன் வந்துள்ளது.

பின்னர் போலீசாரிடம் குரங்குகளின் அட்டகாசம் குறித்து எடுத்துக்கூறி, தான் பிடித்துவந்த குரங்கை காவல்நிலையத்தில் ஒப்படைத்துச் சென்றுள்ளார். பிடிபட்ட குரங்கை போலீசார் காட்டுப்பகுதியில் விடுமாறு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் அந்த ஸ்மார்ட் குரங்கு, வனத்துறையினரின் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜ்கரைச் சேர்ந்த அந்த நபர் குரங்கை இருசக்கர வாகனத்தில் ஏற்றிவரும் வீடியோ தற்போது இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.