உத்தரப்பிரதேசம் முகநூல்
இந்தியா

உத்தரப்பிரதேசம்: 6 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த அசம்பாவிதம்; சீறிப்பாய்ந்து தடுத்த குரங்குகள்!

சற்றுநேரத்தில் நடக்கவிருந்த அசம்பாவிதம்.. சரியான நேரம் பார்த்து ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த குரங்குகள்....குரங்களின் உதவியால் உயிர் தப்பிய 6 வயது குழந்தை. என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்?

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில் கடந்த 21 ஆம் தேதி, யுகேஜி படிக்கும் 6 வயது குழந்தை ஒன்று விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அங்கே யாரும் இல்லாததை கவனிக்கவே... உடனடியாக அக்குழந்தையை மிரட்டி பாழடைந்த வீட்டிற்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு வைத்து குழந்தை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

அப்போது, இதைகண்ட சில குரங்குகள் ஆக்ரோஷமாக அந்நபரின் மீது சீறிப்பாயவே, அலறியடித்த அந்த அடையாளம் தெரியாத நபர்.. குழந்தையை விட்டு விலகி உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியுள்ளார்.

இதனையடுத்து, குரங்குகளின் உதவியால் அவ்விடத்திலிருந்து தப்பித்து, தனது பெற்றோரிடத்தில் வந்து சேர்ந்த சிறுமி, தனக்கு நேர்ந்தவற்றை விவரித்துள்ளார். குறிப்பாக குரங்குகள் எப்படி தன்னை காப்பாற்றியது? என்பதையும் ஒன்றுவிடாமல் பெற்றோரிடத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பெற்றோரின் புகாரின் பேரில் அந்த அடையாளம் தெரியாத குற்றவாளியின் மீது BNS 74,76 மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சிசிடிவி அடிப்படையில் குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை

இது குறித்து தெரிவித்த சிறுமியின் தந்தை உள்ளூர் ஊடகங்களில், “குற்றவாளி எனது மகளுடன் நடந்து செல்வது, அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இருப்பினும் , அவர் யார் என்று தெளிவாக தெரியவில்லை. குரங்குகள் மட்டும் தக்க சமயத்தில்வந்து என் குழந்தையை காப்பாற்றாமல் போயிருந்தால், எனது மகள் இந்நேரம் இறந்திருப்பாள்” என்று தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் இந்த சம்பவம் கேட்போரை பெரும் ஆச்சரியத்தையில் ஆழ்த்தியிருந்தாலும், இன்னொருபுறம் குழந்தைக்கு நிகழ்ந்தது அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மத்தியப்பிரதேசத்தில் நடுரோட்டிலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணிற்கு உதவாமல் அதனை வீடியோவாக பதிவு செய்த சில மனித மிருகங்களுக்கு இடையில்... இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி ‘மிருகத்துக்குள்ளும் மனிதம் இருக்கிறது’ என நம் முகத்தில் அறைந்திருக்கிறது இச்சம்பவம்!