mohan yadav pt web
இந்தியா

பி.ஹெச்டி படிப்பு.. தொழிலதிபர், வழக்கறிஞர்; மத்திய பிரதேச முதல்வராகும் மோகன் யாதவ்; யார் இவர்?

மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

போபாலில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மத்திய பிரதேச மாநிலத்தின் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது. தற்போதைய முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், பிரகலாத் சிங் படேல், நரேந்திர சிங் தோமர், கைலாஷ் விஜயவர்க்கியா உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சிவராஜ் சிங் சவுகான், பார்வையாளராக நியமிக்கப்பட்ட ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் உரையாற்றிய மோகன் யாதவ், மக்களுக்கு தன்னால் முடிந்த அனைத்து நன்மைகளையும் செய்வேன் என்றும், தங்களது அன்பிற்கும், வாழ்த்துக்களும் நன்றி என தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோகன் யாதவ், சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். நடப்பு சட்டப்பேரவைத் தேர்தலில் தெற்கு உஜ்ஜைன் தொகுதியில் போட்டியிட்டு 12 ஆயிரத்து 941 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மோகன் யாதவ் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட செய்தி அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் தொகுதி மக்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

58 வயதான மோகன் யாதவ் 1965 ஆம் ஆண்டு உஜ்ஜைனியில் பிறந்தவர். சட்டப்படிப்பில் இளங்கலை பட்டம் தவிர, எம்.பி.ஏ., பி.ஹெச்டி உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றுள்ளார். தொழிலதிபர், அரசியல்வாதி, வழக்கறிஞர் என்ற பன்முகம் கொண்ட அவர், 1980 ஆம் ஆண்டு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.-யில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியல் பயணத்தை தொடங்கினார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருக்கமாக இருந்த மோகன் யாதவ் முதல்முறையாக 2013 ஆம் ஆண்டு கோயில் நகரமான தெற்கு உஜ்ஜைனில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மத்திய பிரதேச மாநில சுற்றுலா வளர்ச்சித்துறையின் தலைவர், உஜ்ஜைன் நகராட்சி மேம்பாட்டு கழகத்தின் தலைவர், மல்யுத்த அமைப்புகளின் பொறுப்புகளையும் அவர் வகித்துள்ளார்.

2018, 2023 ஆகிய ஆண்டுகளிலும் தெற்கு உஜ்ஜைன் தொகுதியில் போட்டியிட்டு மோகன் யாதவ் வெற்றி பெற்றுள்ளார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர், கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த போது அமைந்த சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

மத்திய பிரதேச உயர்கல்வித்துறை அமைச்சராக மோகன் யாதவ் பதவி வகித்த போது, ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை உள்ளிட்ட ஆன்மீக படிப்புகளை கல்லூரி பாடத்திட்டங்களில் அறிமுகம் செய்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தின் 19ஆவது முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோகன் யாதவ், அம்மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மூன்றாவது முதலமைச்சர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.