உத்தரப்பிரதேசத்தில் தனக்கு எதிராக தொடரப்பட்ட 6 எப்.ஐ.ஆர்.களை ரத்து செய்யக்கோரி பத்திரிகையாளர் முகமது ஜுபைர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளப் பதிவுகளை செய்ததாக உத்தரப்பிரதேச காவல்துறையினரால் பல்வேறு காலகட்டங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் ஒவ்வொரு வழக்கிலும் சமீபமாக அவர் கைது செய்யப்பட்டு வருகிறார். இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ராஸ், ஜாஜியாபாத், முசாபர்நகர், லக்கீம்பூர், சீத்தார்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 6 முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி முகமது ஜுபைர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இந்த ஆறு வழக்கிலும் தனக்கு ஜாமின் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்குகளை விசாரணைக்கு பட்டியில் இடுமாறு முகமது ஜுபைர் சார்பில் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஏற்கனவே முகமது ஜுபைர் ஜாமின் கோரி தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்குகளும் அவர் அமர்விலேயே விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி கூறினார்.
இதையும் படிக்கலாம்: மாடியில் இருந்து 4 மாதக் குழந்தையை தூக்கி வீசிய குரங்கு - உ.பி.யில் சோகம்