இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் அறிவித்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பல மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சில மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்து அந்தந்த மாநில முதல்வர்களே உத்தரவு பிறப்பித்துள்ளனர். அந்தவகையில் தமிழகத்திலும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள்து.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். அப்போது ஊரடங்கின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பிரதமர் விவரிப்பார் எனத் தெரிகிறது. இந்தியா முழுவதும் ஒரே உத்தரவாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தியாவசிய பொருட்களை தயார் செய்யும் தொழிற்சாலைகளுக்கு ஒரு சில வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளை வகைப்படுத்தி சில தளர்வுகளை அறிவித்து ஊரடங்கு நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.