பாஜக புதிய தலைமுறை
இந்தியா

மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராகிறார் மோடி!

பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், 15 கட்சிகள் பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில், நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

PT WEB

பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனையில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியின் அருகே அமர்ந்திருந்தனர்.

ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி, ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், லோக் ஜன சக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான் மற்றும் தலைவர் அனுப்ரியா பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பிரிவு சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல் ஆகியோரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் தலைவரான ஜெயந்த் சௌத்ரியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இக்கூட்டத்தில், “நாட்டின் வளர்ச்சியே கூட்டணி அரசின் குறிக்கோளாக இருக்க வேண்டும். விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றம் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், நாட்டின் பாரம்பரியத்தை காக்கவும் தொடர்ந்து சேவையாற்ற வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சரவையில் பதவிகள் மற்றும் இலாகாக்கள் போன்ற அம்சங்களை சுமூகமாக பேசி முடிக்கவும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை தெரிவித்திருப்பதாக பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழுவுக்கு தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா தலைமையிலான அரசு அமைவதற்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு கடிதங்களை அளித்துள்ளதாக பாஜக தலைவர்கள் தெரிவித்தனர். நாளை மறுநாள் (ஜூன் 9) மோடி பதவியேற்பார் எனக் கூறப்படுகிறது.