கிராமப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் வரும் 2024ஆம் ஆண்டுக்குள் குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி நிதி ஆயோக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
ஐந்தாவது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்றனர். வரும் 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டின் வருமானத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாட்டு மக்கள் பிரச்னையின்றி வாழவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் வழிவகை செய்ய வேண்டும் என தனது உரையில் மோடி குறிப்பிட்டார். தற்போது நாட்டில் நிலவிவரும் தண்ணீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜலசக்தி அமைச்சகம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
தண்ணீரை பாதுகாக்க அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் வரும் 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், நிதின்கட்கரி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிற மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.