உத்தரபிரதேசத்தில் 9 மருத்துவக் கல்லூரிகள் திறந்தது சாதனையாக இருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் ஒரே நாளில் 11 மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்து தன்னுடைய சாதனையை தானே முறியடித்துள்ளதாக என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். மருத்துவக்கல்லூரிகளுடன், சென்னையில் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
'தை பிறந்தால் வழி பிறக்கும்' என தமிழில் பேசி தனது உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, '' மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2014ஆம் ஆண்டில் 317ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 597ஆக உயர்ந்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாட்டின் மருத்துவக்கல்லூரி எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் 9 மருத்துவக் கல்லூரிகள் திறந்தது சாதனையாக இருந்தது தற்போது தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரியை திறந்து இருப்பது என்னுடைய சாதனையை தானே முறியடித்து கொள்கின்றேன். சுகாதாரத்துறையில் அதிக அக்கறை செலுத்துவதற்கு கொரோனா நோய்த் தொற்று ஒரு முக்கியக் காரணம். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் மருத்துவத் திட்டங்களுக்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளில் இந்தியா வருபவர்களுக்குத் தேவையான வசதிகள் உள்ளன. தமிழ் சார்ந்த படிப்புகளில் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம் முக்கியப்பங்கு வகிக்கும். தேசியக் கல்விக் கொள்கையில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து பொறியியல் துறையில் சாதித்தவர்கள் அதிகம். கொரோனா தடுப்பு தொடர்பான அனைத்து வழிமுறைகளையும் மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்'' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.