மோடி web
இந்தியா

"குழந்தைகள், பெண்கள் மீதான அத்துமீறல்களுக்கு மரணதண்டனை.." - பிரதமர் மோடி

Rishan Vengai

சமீபத்தில் வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இப்படி பெண்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமை சம்பவங்கள் ஒன்றும் புதிதானவை அல்ல, எத்தனை பெண்கள், குழந்தைகள் வன்கொடுமை செய்யப்பட்டாலும் அதற்கு தண்டனை வழங்கப்பட்டாலும் இதுபோலான கொடூர சம்பவங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கு நிரந்தர முடிவு என்ன தான் என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல்தான் இருந்துவருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, பெண்கள், குழந்தைகள் மீதான அத்துமீறல்களுக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் சிறை தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தார்.

மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டம்!

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்குவானில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, குழந்தைகள் மற்றும் பெண்கள்மீதான அத்துமீறல்களை முன்னரே தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியுள்ளார். அவர்கள் மீதான தாக்குதல்களுக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் சிறை தண்டனை கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், காவல் நிலையங்களில் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறினார். காவல் நிலையங்களுக்கு செல்லாமல், ஆன்லைன் எப்.ஐ.ஆர். பதிவு செய்யலாம் என்றும், அதை யாராலும் திருத்தி எழுதவோ, மாற்றவோ முடியாது என்றும் விளக்கமளித்தார்.

போலி திருமண உத்தரவாதத்தின் மூலம் அத்துமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க பாரதிய நியாய சங்ஹித சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றார். இதற்காக, மாநிலஅரசுடன் மத்திய அரசு துணை நிற்கும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.