பீகார் தேர்தலில் ஹத்துவா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அபிநந்தம் பதக், பிரதமர் நரேந்திர மோடியைப் போலவே தோற்றம் கொண்டிருப்பது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஹத்துவா தொகுதியில் வஞ்சித் சமாஜ் கட்சியின் சார்பாக போட்டியிடும் அவர், தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 53 வயதான அபிநந்தம் பதக், பிரதமர் மோடியைப் போலவே இருப்பது தொகுதி மக்களை வியப்படையவைத்துள்ளது.
அபிநந்தம் பதக்
"ஹத்துவா தொகுதி வளர்ச்சி அடையாத மிகவும் பின்தங்கிய பகுதியாக இருக்கிறது" என்கிறார் பதக். ஆனால் அவருக்குச் சொந்த ஊர் உத்தரப்பிரதேச மாநிலம், சஹரான்பூர் மாவட்டத்தில் உள்ளது. தற்போது அவர் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வாரியா பகுதியின் சவன்னஹா கிராமத்தில் வசித்துவருகிறார்.
பிரதமர் மோடியைப் போலவே இருக்கிறீர்களே என்று கேட்டால், " இது தற்செயலானது. மோடி அதிகாரத்திற்கு வந்துவிட்டார். ஆனால் எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை. அடுத்த என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நான் ஏழைகளின் உரிமைகளுக்குப் போராடுவதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறேன்" என்கிறார்.
நிதிஷ்குமார் அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராக இருக்கும் ராம்சேவக் சிங்க்கை எதிர்த்து அவர் களமிறங்கியுள்ளார். பீகார் சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது கட்டமாக நவம்பர் 3 ஆம் தேதியன்று ஹத்துவா தொகுதியில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.