இந்தியா

இன்று மாலை கூடுகிறது புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்

இன்று மாலை கூடுகிறது புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்

webteam

புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடுகிறது.

நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். மோடியை அடுத்து ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து பதவியேற்றனர். 

மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 கேபினேட் அமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதில் பல்வேறு புதுமுகங்களும் இடம்பெற்றுள்ளனர். சிவசேனா, அகாலிதளம் உள்ளிட்ட கூட்டணிகளுக்கும் அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை கூடுகிறது. பிரதமர் மோடி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்தும் தேதி முடிவு செய்யப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் 6 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் குடியரசுத்தலைவரின் உரையுடன் தொடங்கும் என்றும், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் புதிதாக தேர்வாகியுள்ள எம்பிக்களுக்கு இடைக்கால சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் 10 ஆம் தேதி சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும் என்றும் தெரிகிறது.