இந்தியா

யோகா தினமும் பிரதமர் மோடியும் - டைம்லைன்

யோகா தினமும் பிரதமர் மோடியும் - டைம்லைன்

webteam

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் 51 ஆயிரம் பேர் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.

உடல் நலத்துக்கும், மன நலத்துக்கும் உதவும் யோகக்கலை உலகமெங்கும் பரவும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என ஐ.நா. சபை அறிவித்தது. 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு முதல் யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், மூன்றாவது சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

2014 - யோகா தினத்தை முன்மொழிந்தார் பிரதமர் மோடி

செப்டம்பர் 2014 ஆம் ஆண்டு, ஐநா பொதுச்சபையில், ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் பிரதமர் மோடி. டிசம்பர் 2014-ல், ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தரத் தூதரான அசோக் முகர்ஜி, யோகா தினத்திற்கான வரைவைச் சமர்ப்பித்தார். மொத்தம் உள்ள 193 ஐநா உறுப்பு நாடுகளில், 177 நாடுகளின் அதிகாரப்பூர்வமான ஒப்புதலைப் பெற்று, 21 ஜூன் மாதம் யோகா தினமாக அறிவிக்கப்பட்டது.

2015 - உலக அளவில் கொண்டாடப்பட்ட யோகா தினம்

முதன்முதலாக யோகா தினம் உலகம் முழுவதும், 84 நாடுகளால் கொண்டாடப்பட்டது. இந்தியாவில், ராஜ்பாத்தில் கோலாகலமாக யோகா தினம் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 84 முக்கிய அதிகாரிகள், விஐபிக்கள் மற்றும் பொதுமக்கள் 21 யோகாசனங்களை செய்தனர். 2015 யோகா தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, “யோகாவை, தொடர்ந்து மேற்கொள்வதன் மூலமாக உடலை, மனதை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும்” என்று பேசினார்.

இரண்டு கின்னஸ் விருதுகளை வென்றது இந்த நிகழ்வு. ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் யேசோ நாயக்கிடம் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

2016 - யோகா தினக் கொண்டாட்டம்

30,000 மக்களுடன் பிரதமர் கலந்துகொண்ட அந்த யோகா தின நிகழ்வை, ஆயுஷ் அமைச்சகம் ஒருங்கிணைத்தது. ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ், அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். “உலகம் முழுவதும் 2 பில்லியன் மக்கள் யோகாவை மேற்கொண்டு வருகிறார்கள். யோகா பலன் தருகிறது என்பதே இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது. ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளிருந்துதான் அமைதியையும், மகிழ்ச்சியையும் அடையமுடியும். வெளியிலிருந்து தொடங்க முடியாது” என்று உரையாற்றினார்.

2017 - யோகா தினக் கொண்டாட்டம்

இந்த வருடம் 180 நாடுகளில் யோகா தினம் கொண்டாடப்படுவதாக, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். வானொலி மூலம் பிரதமர் உரையாடும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, “யோகா தினத்தன்று, மூன்று தலைமுறையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் யோகா செய்து, அந்த படங்களை நரேந்திர மோடி மொபைல் ஆப்பில் பதிவேற்றுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

இந்த ஆண்டு யோகா தினத்தையொட்டி, பொதுமக்கள் யோகா தின அனுபவங்கள், செயல்பாடுகளை பகிர்வதற்காக, 'செலிப்ரேட்டிங் யோகா' என்னும் மொபைல் ஆப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.