மருத்துவ பயிற்சியாளர்களாக இருப்பவர்களையும், இறுதி ஆண்டு மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களையும் கொரோனாவுக்கு எதிரான களப்பணியில் ஈடுபடுத்தப்படுத்தப்படலாம் என பிரதமர் மோடி அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முக்கிய முடிவுகளுக்கு வித்திட்டிருக்கும் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த பிற முக்கியமான தகவல்கள் :
* மருத்துவப் பயிற்சியாளர்கள் கொரோனா கட்டுப்பாட்டு பணிகளிலும், இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்கள் கொரோனா தொடர்பான தொலைப்பேசி ஆலோசனை மற்றும் லேசான கொரோனா பாதிப்பு இருப்பவர்களை கண்காணிக்கும் பணிகளிலும், இனிவரும் காலங்களில் பயன்படுத்தப்படலாம். இந்த இருதரப்பினருமே, மூத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கண்காணிப்பின் கீழ்தான் செயல்படவேண்டும்.
* மூத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கண்காணிப்பின் கீழ் இளங்கலை/ பொது செவிலியர்கள் மற்றும் தாதியர் பயிற்சி பெறும் செவிலியர்களை அவசரகால மருத்துவ பிரிவு உள்ளிட்ட பணிகளில் முழு நேரம் பயன்படுத்திக் கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட செவிலிய அதிகாரிகளான முதுகலை செவிலிய மாணவர்கள், போஸ்ட் பேசிக் இளங்கலை (செவிலியர்) மற்றும் போஸ்ட் பேசிக் டிப்ளமோ செவிலியர் மாணவர்களின் சேவையை மருத்துவமனையின் நெறிமுறைகள்/ கொள்கைகளின் அடிப்படையில் கோவிட்- 19 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
* மருத்துவ மேற்படிப்பு படிப்பவர்களுக்கான நுழைவுத் தேர்வு, இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்படுகிறது. இம்முறை தேர்வு குறைந்தபட்சமாக நான்கு மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு தேதி, ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு பிறகு இருக்கும். தேர்வு நடைபெறும் தேதிக்கு ஒருமாதத்துக்கு முன்னரே தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுவிடும்.
* கொரோனா சேவையில், 100 நாள்களுக்கு பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் பிரதமரிடமிருந்து பேரிடர் காலத்திற்கான சிறப்பான சேவைக்கான பாராட்டுபத்திரம் அளிக்கப்படும். மேலும் அவர்கள் அரசுப் பணிக்கு முயலும்போது, அவர்களது பேரிடர் கால பணியை கருத்தில் கொண்டு, பணி நியமணத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
* மேற்படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடிய மாணவர்களை மாநில/ யூனியன் பிரதேச அரசுகள் தொடர்புகொண்டு கோவிட்-19 பணியில் அவர்களை ஈடுபடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். இந்த எம்பிபிஎஸ் மருத்துவர்களின் சேவையை கோவிட்-19 மேலாண்மையில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆசிரியர்களின் கண்காணிப்பின் கீழ் கோவிட் மேலாண்மையில் மருத்துவ உள்ளுறைவாளர்களை, உள்ளிருப்பு பயிற்சியின் சுழற்சி முறையில் மாநில/ யூனியன் பிரதேச அரசுகள் தற்போது நியமிக்கலாம்.
* முதுகலை மாணவர்களின் புதிய குழு இணையும் வரை, முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் மருத்துவ சேவை (பொதுவான மற்றும் சிறப்பு தனித்தன்மை வாய்ந்த) தொடரலாம். அதேபோல புதியவர்கள் நியமிக்கப்படும் வரை மூத்த மருத்துவர்கள்/ பதிவாளர்களின் சேவைகளையும் தொடரலாம்.
* இறுதியாண்டு தேர்வுகளை எதிர்நோக்கியுள்ள செவிலியர்கள் மற்றும் தாதியர் பயிற்சி அல்லது இளங்கலை (செவிலியர்கள்) இறுதி ஆண்டு மாணவர்கள் பல்வேறு அரசு தனியார் மருத்துவமனைகளில் மூத்த ஆசிரியரின் கண்காணிப்பின் கீழ் முழுநேர கோவிட் வார்டு செவிலியராக பணியாற்றலாம்.
* மருத்துவம் சார்ந்த படிப்புகளில் நிபுணத்துவம் பெற்றவர்களது பயிற்சி மற்றும் சான்றிதழை அடிப்படையாகக்கொண்டு, கோவிட் மேலாண்மையில் அவர்களது சேவையை பயன்படுத்தலாம்.
* கோவிட் சம்பந்தமான பணியில் ஈடுபடும் மருத்துவ மாணவர்கள் /தொழில் நிபுணர்களுக்கு தகுந்த தடுப்பூசி போடப்படும். இதுபோன்று பணியமர்த்தப்படும் அனைத்து மருத்துவ பணியாளர்களும், கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவ ஊழியர்களுக்கான அரசின் காப்பீட்டு திட்டத்தால் பயனடைவார்கள்.
* இது போன்ற வழிமுறைகளில் பணியமர்த்தப்படும் கூடுதல் மருத்துவ பணியாளர்களின் சேவையை தனியார் கோவிட் மருத்துவமனைகளிலும், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளிலும் மாநில அரசுகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
* காலியாக உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள், இத்துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் சுகாதாரம் மற்றும் மருத்துவ துறைகளின் இதர மருத்துவ பணியாளர்களுக்கான இடங்கள், தேசிய சுகாதார இயக்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் 45 நாட்களுக்குள் ஒப்பந்தத்தின் பெயரில் விரைந்து நிரப்பப்பட வேண்டும்.
இவ்வாறு அதிகரிக்கப்படும் மருத்துவ சேவைக்கான மனிதவளம், கோவிட் மேலாண்மையில் மட்டுமே பயன்படுத்தப்படும். மேற்குறிப்பிட்ட கூடுதல் மனித சக்தியை ஈடுபடுத்துவதில் தேசிய சுகாதார இயக்கத்தின் மனிதவள ஒப்பந்தத்திற்கான வழிமுறைகளை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் பின்பற்றலாம். இந்த வழிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதியம் குறித்த முடிவை மாநிலங்கள் மாற்றி இறுதி செய்துகொள்ளலாம். கோவிட் சேவையில் ஈடுபட்டதற்கான தக்க வெகுமானமும் வழங்கப்படலாம்"எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதால் மருத்துவத் துறை சந்தித்திருக்கும் மிக மோசமான பின்னடைவை கருத்தில்கொண்டு அரசு மேற்சொன்ன முடிவுகளை எடுத்திருக்கிறது. இந்தியாவில் நிலவி வரும் படுக்கை வசதி இல்லாமை, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்றவையால் இப்போதைக்கு பல மருத்துவ பணியாளர்கள் மனதளவில் துவண்டுபோயிருக்கின்றனர். அவர்களின் நலனுக்காகவும், அவர்களுக்கு சற்று ஓய்வளித்து வரும்நாள்களில் உத்வேகமான சேவைக்காகவும் மேற்குறிப்பிட்ட முடிவுகளை அரசு எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. பேரிடர் காலத்தில் களத்தில் புதிய மருத்துவப் பணியாளர்களை பணிக்கு அமர்த்துவது, பக்குவமான முடிவு என மருத்துவ செயற்பாட்டாளர்கள், மத்திய அரசின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.