இந்தியா

“குஜராத் விவசாயிகள் தாங்களாகவே மின்உற்பத்தி செய்கின்றனர்”- பிரதமர் பெருமிதம்

“குஜராத் விவசாயிகள் தாங்களாகவே மின்உற்பத்தி செய்கின்றனர்”- பிரதமர் பெருமிதம்

webteam

குஜராத் மாநிலம் மோதேரா கிராமத்தை இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாக அறிவித்து, மோதேராவில் உள்ள சூரிய கோயிலில் 3-டி தொழில்நுட்பத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. குஜராத்தில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் சோலார் பேனல்களை நிறுவி தாங்களாகவே மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை மாநில முதல்வர் பூபேந்திர படேல் விமான நிலையத்தில் வரவேற்றார். இதைத்தொடர்ந்து குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மோதேரா கிராமத்தை இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாக அறிவித்து மொதேராவில் உள்ள சூரிய கோவிலில் 3-டி தொழில்நுட்பத்தை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தில் இன்று புதிதாக தொடங்கப்பட்ட திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்புகள் மேம்படும். விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் மற்றும் குஜராத்தின் பாரம்பரிய சுற்றுலா மேம்படும்.

நமது புகழ்பெற்ற பாரம்பரியத்துடன் புதிய தொழில்நுட்பத்தை இணைத்ததற்காக மோதேரா முழு இந்தியாவுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மின்சாரம் இல்லாததால் முன்பு கல்வி மற்றும் வீட்டு வேலைகளில் பல இடையூறுகள் மற்றும் சிக்கல்கள் இருந்தன. ஆனால் தற்போது சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கான நெறிப்படுத்தப்பட்ட இலக்கை புதிய இந்தியா அடையும்.

மெஹ்சானா மக்கள் பல இன்னல்களை சந்தித்த காலம் இருந்தது. எங்கள் மகள்கள் தண்ணீர் மற்றும் மின்சாரத்திற்காக நீண்ட தூரம் நடக்க வேண்டி இருந்தது. இன்று புதிய தலைமுறையினர் இந்த பிரச்னைகளை எதிர்கொள்ளவில்லை. 21-ஆம் நூற்றாண்டில் ஆத்மநிர்பார் பாரத் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நமது ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும். ஏராளமான இயற்கை வளங்களை பயன்படுத்துவதன் மூலமும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளை ஊக்குவிப்பது மூலமும் உலகிற்கு ஆற்றல் வழங்குநராக மாறுவதை நோக்கமாக நாம் கொள்ள வேண்டும். இதுவரை அரசு மின்சாரம் உற்பத்தி செய்து வந்தது. மக்கள் அதை வாங்கி வந்தனர். ஆனால் இப்போது குஜராத்தில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் சோலார் பேனல்களை நிறுவி தாங்களாகவே மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள்.

ஒரு அரசு செய்யக்கூடியது மாநிலத்தில் தொழில்களை நிறுவுதல், சுற்றுலாவை மேம்படுத்துதல் மற்றும் நிர்வாகத்தில் மக்களின் பங்கேற்புடன் இணைப்பதை அதிகரிப்பதாகும். அப்போதுதான் நிலையான வளர்ச்சி என்ற இலக்கை அடைய முடியும்.

மேலும் குஜராத் மாநிலத்தில் தண்ணீர் மற்றும் மின்சாரம் கிடைப்பது, இளைஞர்களுக்கான கல்வி மற்றும் முதியவர்களுக்கான மருத்துவ வசதி, விவசாயம் மற்றும் விவசாயத்தை மாற்றுதல், இணைப்புக்கான உட்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தி குஜராத் மாநிலத்தை நாங்கள் கட்டமைத்து இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மாநிலத்தில் அடுத்தடுத்து பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

-விக்னேஷ் முத்து