தமிழ்நாடு வக்ஃப் வாரியம் pt web
இந்தியா

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா: முக்கிய முன்மொழிவுகள் என்ன? எதிர்ப்பு ஏன்?

PT WEB

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா

மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவில், மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் பெண்களுக்கும், இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டுமென்கிற முன்மொழிவுகள் இடம்பெற்றுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய முன்மொழிவுகள்...

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவின்படி, மத்திய வக்ஃப் கவுன்சிலில், ஒரு மத்திய அமைச்சர், 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த 3 பிரதிநிதிகள், உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தை சேர்ந்த இரு நீதிபதிகள், தேசிய அளவில் பிரபலமான நால்வர் இடம் பெற வேண்டும். இதில் இருவர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்களாக இருத்தல் வேண்டும். அதேபோல் மாநில வக்ஃப் வாரியங்களிலும், இரு பெண்கள் இடம்பெற வேண்டும். இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கும் வக்ஃப் கவுன்சிலில் பிரநிதித்துவம் அளிக்கவும், இந்த சட்டத் திருத்த மசோதா வழிவகை செய்கிறது.

யாரெல்லாம் சொத்துக்களை அளிக்க முடியும்

அதேபோல் புதிய சட்டத்திருத்த மசோதாவின்படி, வக்ஃப் வாரிய நிலங்களை இந்திய அளவிலான இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். நிலங்களை பதிவு செய்யும் முன்னர் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டு, உரிய நடைமுறையின்படி அவை பதிவு செய்யப்பட வேண்டும்.

வக்ஃப் கவுன்சிலோ, வாரியமோ, நிலத்தை தன்னுடையது என உரிமை கோர முடியாது. நிலத்தின் உரிமை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்படும். நிலத்தின் உரிமை தொடர்பான வக்ஃப் வாரியம் அல்லது வக்ஃப் கவுன்சிலின் முடிவை எதிர்த்து, 90 நாட்களுக்குள் உயர்நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பையும் சட்டத்திருத்த மசோதா வழங்குகிறது.

தமிழ்நாடு வக்ஃப் வாரியம்

இதனை தவிர இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் மட்டுமே தங்களது சொத்தை வக்ஃப் வாரியங்களுக்கு வழங்க முடியும். சொத்துகளை வழங்குவது குறித்து அதன் சட்டப்பூர்வ உரிமையாளர் மட்டுமே முடிவெடுக்க முடியும்... வக்ஃப் வாரியம் தனது நிதியை கைம்பெண்கள், விவாகரத்தானவர்கள், ஆதரவற்றவர்கள் ஆகியோரின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த இயலும், அதுவும் அரசு பரிந்துரையின் பேரிலேயே அதனை செயல்படுத்த இயலும். முக்கியமாக, பெண்களின் வாரிசுரிமை பாதுகாக்கப்பட வேண்டுமெனவும், உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் கூறுகிறது இந்த புதிய சட்டத்திருத்த மசோதா. அதேபோல் வக்ஃப் வாரியங்களில் ஷியா, சன்னி, போஹ்ரா உள்ளிட்ட பிரிவினருக்கான பிரதிநிதித்துவத்தையும் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா உறுதி செய்கிறது.

வலிமையாக எதிர்ப்போம் - நவாஸ் கனி

இந்த சட்டத்திருத்தம் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து மத்திய அரசு, இதுவரை மக்களவை மற்றும் மாநிலங்களவை அலுவல் பட்டியல்களில் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இதனிடையே இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு INDIA கூட்டணி கட்சியினரும், இஸ்லாமிய அமைப்புகளும் கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இது தொடர்பாக கூறுகையில், “முறையாக திருத்தம் கொண்டு வர வேண்டுமென்றால், ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். சொத்துகளை தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் சட்டத்திருத்தம் உள்ளது. வலிமையாக எதிர்ப்போம்; சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

சர்ச்சையாக மாறியுள்ள வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற, பாஜகவிற்கு அதன் கூட்டணி கட்சிகளின் ஆதரவும் தேவை என்ற நிலை உள்ளது. இதனால், வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறுமா? உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன. அவற்றுக்கான பதில் விரைவில் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது...