இந்தியா

எதிர்க்கட்சிகள்மீது பழிபோடும் மோடி... டெல்லியில் போராட்டத்தைத் தொடர்வதில் விவசாயிகள் உறுதி

எதிர்க்கட்சிகள்மீது பழிபோடும் மோடி... டெல்லியில் போராட்டத்தைத் தொடர்வதில் விவசாயிகள் உறுதி

Veeramani

"வேளாண் சட்டங்கள் பற்றி திரித்துக்கூறி, விவசாயிகளை எதிர்க்கட்சிகள் திசைதிருப்ப முயல்கின்றன" என்று வாரணாசியில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தப் பேச்சு, 'டெல்லி சலோ' போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்று சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்கள் மூலமாக விவசாயம் முழுமையும் கார்ப்பரேட் கம்பெனிகளின் பிடிக்குள் செல்லும் என்றும், குறைந்த பட்ச ஆதாரவிலை என்பதே இல்லாமல் போகும் என்றும், படிப்படியாக அரசின் விவசாய விளைபொருள் கொள்முதல் நிலையங்கள் மூடப்படும் என்றும் ஆரம்பம் முதலே விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.

கடும் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசு இந்த மூன்று வேளாண் பண்ணைய சட்டங்களை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றியது. இதனால் நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மற்ற மாநிலங்களை விடவும் வீரியமான போராட்டங்களை பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் செய்துவருகின்றனர். இவர்களின் 'டெல்லி சலோ' போராட்டம் ஐந்தாவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்ந்துள்ளது.

5 மாநில எல்லைகளில்...

டெல்லி புராரி மைதானத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, டெல்லியை சுற்றியுள்ள முக்கியமான 5 மாநிலங்களின் எல்லைகளை போலீசார் சீல் வைத்து கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். உணவு, குடிநீருடன் போராட்டக் களத்திற்கு வந்துள்ள விவசாயிகள் தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர திட்டமிட்டுள்ளனர். 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

மோடி பேசியது என்ன?

ஆனால், மத்திய அமைச்சர் அமித் ஷாவோ, "விவசாயிகள் போராட்டக் களத்தை மாற்றினால் பேச்சுவார்த்தை நடத்த தயார்" என்று அறிவித்தார். இதேபோல், இன்று வாரணாசியில் பேசிய பிரதமர் மோடியும், "வேளாண் சட்டங்கள் பற்றி திரித்துக்கூறி, விவசாயிகளை எதிர்கட்சிகள் திசைதிருப்ப முயல்கின்றன. புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் தங்களுடைய வருவாயை பெருக்கிக்கொள்ள முடியும். இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம். வரும் நாட்களில் வேளாண் சட்டங்களின் பலன்களை விவசாயிகள் காணமுடியும்.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என்பது ஒரு வகை பித்தலாட்டமே. எதிர்கால நலன் என்கிற பெயரில் இல்லாத ஒன்றை சொல்லி விவசாயிகளை இதற்குமுன் இருந்த அரசுகள் ஏமாற்றி வந்துள்ளனர். இதற்குமுன் இருந்த சட்டங்களால், சிறிய அளவிலான விவசாயிகள் நேரடியாக தங்கள் விளைபொருட்களை சந்தைக்குச் சென்று விற்கக்கூடிய நிலையை ஏற்படுத்தி தரவில்லை. அந்தச் சூழ்நிலையை புதிய சட்டங்கள் ஏற்படுத்தி தருகிறது. இதை விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும்" என்று பிரதமர் மோடி பேசினார். மேலும் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவும், அவர்கள் உடனான பேச்சுவார்த்தை தொடர்பாகவும் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

போராட்டத்தைத் தொடர்வோம்: விவசாயிகள் உறுதி

மோடியின் பேச்சுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விவசாயிகள், "மோடி, அமித் ஷா பேச்சால் கடும் அதிருப்தி அடைந்துள்ளோம். ஒன்றை மற்றும் சொல்லிக்கொள்கிறோம். நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என்று அழைத்தால் மட்டுமே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வருவோம். நிபந்தனையின்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் எங்கள் போராட்டத்தை நாங்கள் தொடர்வோம். மேலும் டெல்லிக்கு வரும் விவசாயிகளை மாநில எல்லைகளில் எல்லைகளில் தடுத்து நிறுத்தக்கூடாது" என்று அறிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் போராட்டம் மேலும் தொடரவுள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர் அரசியல் தலைவர்கள். "தவறான கண்ணோட்டங்களால் விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. இதனை தீர்க்க வேண்டும். மத்திய அரசும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் நிலைமையை புரிந்து கொண்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்" என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

இதேபோல், "காலங்களை தாழ்த்தாமல் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்த வேண்டும்" என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். "குறைந்தபட்ச ஆதார விலை, இலவச மின்சாரத்தை மறுத்து - விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, கார்ப்பரேட்களுக்கு உதவும் பாஜக அரசின் தந்திரம் புரிந்து டெல்லியை முற்றுகையிடுகிறார்கள் விவசாயிகள்! அவர்களின் உணர்வுகளைப் புரிந்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்" என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.