இந்தியா

குற்றவாளிகளின் சவுக்கிதார் பிரதமர் மோடி - சந்திரபாபு நாயுடு

குற்றவாளிகளின் சவுக்கிதார் பிரதமர் மோடி - சந்திரபாபு நாயுடு

webteam

குற்றவாளிகளுக்கும், ஊழலுக்குமே பிரதமர் நரேந்திர மோடி சவுக்கிதாராக (காவலாளி) இருப்பதாக என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு எதிராக கூட்டணியை உருவாக்கி பிரதமர் மோடிக்கு எதிராக வியூகத்தை அமைத்து வருகிறார் ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு. தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் விசாகப்பட்டினத்தில் மாபெரும் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

பிரசார கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பிரதமர் மோடி ஒரு எதிர்மறையான தலைவர் என்றும், அவரை தோற்கடித்து மீண்டும் குஜராத்துக்கே மக்கள் அனுப்பி வைப்பார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் பேசிய சந்திரபாபு நாயுடு, தனக்கு மாற்றாக இங்கு எவரும் இல்லை என்று மோடி கூறி வருகிறார். அவரை விடவும் நல்ல தலைவர்கள் இங்கு இருக்கிறார்கள். மோடியை பிரதமராக பெற்றது இந்தியாவின் துரதிஷ்டம் தான் என்று தெரிவித்தார்.

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் ஆந்திரா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இடையூறு செய்து வருவதாக குற்றம் சாட்டிய சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதாக வாக்குறுதிகளை அள்ளி வீசிய மோடி, இன்று ஆந்திர மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்றும் தெரிவித்தார்.