இந்தியா

சென்னை டு மதுரை ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

webteam

சென்னை மதுரை இடையேயான தேஜஸ் ரயில் சேவை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடி கடந்த மாதம் மதுரை மாநாட்டில் கலந்துக் கொள்ளவும், எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்காகவும் தமிழகம் வந்தார். பின் திருப்பூர் வந்த பிரதமர் மோடி, பாஜக மாநாட்டில் கலந்து கொண்டார். இந்நிலையில் பிரதமர்  இன்று கன்னியாகுமரி வந்துள்ளார். 

விசாகப்பட்டினத்திலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார். அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்படி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தம்பிதுரை எம்.பி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை உட்பட பலர் வரவேற்றனர். 

இந்நிலையில், சென்னை - மதுரை இடையேயான தேஜஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தேஜஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இனி சென்னை - மதுரை அதிவேக தேஜஸ் ரயிலில் ஆறரை மணி நேரத்தில் மதுரை, சென்னைக்கு செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவி, ஜிபிஎஸ் அடிப்படையிலான தகவல் சேவை, வைஃபை போன்ற நவீன வசதி தேஜஸ் ரயிலில் இடம் பெற்றுள்ளன. இந்த ரயில் வியாழன்கிழமை தவிர மற்ற எல்லா வார நாட்களிலும் இயக்கப்படும். 

சென்னையிலிருந்து திருச்சிக்கு இந்த ரயிலின் மூலம் 4.30 மணி நேரத்தில் செல்லலாம். மதுரை - செட்டிக்குளம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், பார்வதிபுரம் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் திறந்து வைக்கப்பட்டன. 

மேலும் புயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி - ராமேஸ்வரம் இடையே ரயில் பாதை அமைத்தல், பாம்பன் - ராமேஸ்வரம் இடையே ரூ. 250 கோடியில் புதிய ரயில்வே பாலம் அமைத்தல் செட்டிக்குளம் - நத்தம் இடையே நான்கு வழைச்சலை அமைப்பதற்கு அடிக்கல், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்.